புத்தகம்-2 பத்திரங்கள்

புத்தகம்-2 பத்திரம்

சொத்துப் பத்திரமாக இருந்தாலும், அல்லது சொத்து சம்மந்தப்படாத பத்திரமாக இருந்தாலும், எல்லாப் பத்திரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம்.

பொதுவாக, பத்திரங்களை மூன்று வகையாகப் பிரித்து உள்ளார்கள்.

புத்தகம்-2 என்பது பத்திரங்களைப்  பதிவு செய்து வைக்கும் புத்தகம் இல்லை. இந்தப்  புத்தகம்  பொதுவாக ஏதும் பதிவு செய்யாமல் காலியாகவே இருக்கும்.

நாம் பதிவுக்குக் கொடுக்கும் பத்திரங்கள்  சரியாக இருந்தால் தான், பதிவாளர் அதை பதிவு செய்வார். சரியாக இல்லை என்றால், பதிவாளர் பதிவு செய்ய மாட்டார். அப்படி எந்த எந்த காரணங்களுக்கு ஒரு பத்திரத்தின்  பதிவை மறுக்கலாம் என்று பதிவுச் சட்டம் பிரிவு 71-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பதிவாளர் பதிவு செய்ய மறுத்தால், அதன் காரணத்தை அந்த பத்திரத்தின் பின் பக்கத்தில் எழுதி பதிவாளர் கையெழுத்துச்  செய்ய வேண்டும். அதே காரணத்தை அவர் வைத்துள்ள புத்தகம்-2ல் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விபரங்கள் மட்டுமே புத்தகம்-2ல் இருக்கும்.

அவ்வாறு பதிவுக்கு மறுக்கும் காரணங்கள்:

1) அந்த பத்திரத்தில் உள்ள சொத்து அந்த பதிவு அலுவலக எல்லைக்குள் இல்லாமல் இருந்தால், பதிவு செய்ய மறுக்கலாம்.

2) பத்திரத்தை எழுதிக் கொடுத்தாகச் சொல்பவர் (உதாரணமாக கிரையம் கொடுப்பவர்) அவர் அந்தப் பத்திரத்தில் கையெழுத்துச் செய்யவில்லை என்றோ, அதில் உள்ள கையெழுத்து அவரின் கையெழுத்து இல்லை என்றோ சொன்னால், பதிவாளர் அந்தப் பத்திரத்தை பதிவு செய்ய மறுக்கலாம்.

3) பதிவாளருக்கு தெரியாத ஒரு மொழியில் பத்திரத்தை எழுதி இருந்தால், அதன் மொழிபெயர்ப்பு அவருக்குத் தெரிந்த அல்லது ஆங்கிலத்தில் இல்லாமல் அந்த பத்திரத்தை பதிவுக்குக் கொடுத்தால், அதைப் பதிவு செய்ய மறுக்கலாம்.

4) அந்த பத்திரத்தில்  அதிகமான அடித்தல், திருத்தல், சேர்த்தல், இவை இருந்து, அது பார்ப்பதற்கு படிக்க முடியாத நிலையில் இருந்தால், அதைப் பதிவு செய்ய மறுக்கலாம்.

5) அடித்தல் திருத்தல் இருந்தால் அதில் சம்மந்தப்பட்ட பார்ட்டிகள் சம்மதித்து கையெழுத்துச் செய்யாமல் அப்படியே பதிவுக்குக் கொடுத்தால் அதை பதிவு செய்ய மறுக்கலாம்.

6) பத்திரத்தில்  குறிப்பிட்டுள்ள சொத்தின் விபரம் சரியாக இல்லாமல், சர்வே எண் இல்லாமல், அல்லது அதற்குறிய தெளிவான வரைபடம் இல்லாமல், (அதாவது சொத்தை சரியாக அடையாளப்படுத்தும் விபரங்கள் இல்லாமல்) இருந்தால், அந்தப் பத்திரத்தை பதிவு செய்ய மறுக்கலாம்.

7) ஒரு பத்திரத்தை,  அதை எழுதிய அல்லது அந்த பத்திரத்தில் எழுதியதாக குறிப்பிட்டுள்ள தேதியிலிருந்து நான்கு மாதங்கள் கழித்து, அதைப் பதிவு செய்வதற்கு கொண்டு வந்து கொடுத்தால், அதை பதிவு செய்ய மறுக்கலாம். (எந்தப் பத்திரமாக இருந்தாலும் அது எழுதிய தேதியிலிருந்து நான்கு மாதங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். தவறினால், மாவட்ட பதிவாளருக்கு மனுக் கொடுத்து மேலும் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும்).

8) பத்திரத்தை  எழுதிக் கொடுத்தவரோ, அல்லது அவரின் ஏஜெண்டோ, பதிவு செய்யும் போது, அதை ஒப்புக் கொள்ள நேரில் வரவில்லை என்றால், அந்தப் பத்திரத்தை பதிவு செய்ய மறுக்கலாம்.

9) பத்திரத்தை எழுதிக் கொடுத்தவர் அல்லது அவரின் ஏஜெண்ட், இவர்கள்தானா என்பதில் பதிவாளருக்கு சந்தேகம் இருந்தால், பத்திரப் பதிவை மறுக்கலாம்.

10) பத்திரம்  எழுதிக் கொடுத்தவர், ஒரு மைனராக இருந்தாலோ, மூளை குழம்பியவராக இருந்தாலோ, அந்த பத்திரத்தின் பதிவை மறுக்கலாம்.

11) பத்திரம் எழுதிக் கையெழுத்தும் செய்து கொடுத்துவிட்டு, பதிவு நடப்பதற்கு முன்னர் அவர் இறந்து விட்டால், அவரின் வாரிசுகள் நேரில் வந்து இறந்தவர் எழுதிக் கொடுத்த பத்திரம்தான் என்று உறுதி சொன்னால், அந்தப் பத்திரத்தை பதிவு செய்யலாம். ஆனால் வாரிசுகள் வந்து, இறந்தவரின் கையெழுத்து இது இல்லை என்று மறுத்து விட்டால், அந்த பத்திரத்தை பதிவுக்கு பதிவாளர் மறுக்கலாம்.

12) பத்திரத்தை பலர் எழுதிக் கொடுத்திருந்து, அதில் ஒருசிலர் மட்டும், தான் அவ்வாறு எழுதிக் கொடுக்கவில்லை என்று பதிவின் போது மறுத்தால், அத்தகைய பத்திரத்தை பதிவுக்கு மறுக்கலாம்.

13) பத்திரம்  எழுதிக் கொடுத்தவர் இறந்து விட்டார் என்று சொல்லி அவரின் வாரிசுகள் பதிவுக்கு வந்தால், அப்போது எழுதிக் கொடுத்தவர் இறந்து விட்டார் என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியாத போது, அத்தகைய பத்திரத்தின் பதிவை மறுக்கலாம்.

14) பத்திரத்தில்  குறிப்பிட்டுள்ள தொகைக்கு உரிய பதிவுக் கட்டணத்தை செலுத்த மறுத்தால், அந்தப் பத்திரத்தை பதிவு செய்ய மறுக்கலாம்.

இப்படியாக  மறுக்கும் காரணத்தை புத்தகம்-2ல் எழுதிக் கொண்டு, அந்த பத்திரத்தை கொண்டு வந்த பார்ட்டியிடமே திரும்பக் கொடுத்து விடலாம். அவர் அது சரியான காரணமாக இல்லை என்றால், மாவட்டப் பதிவாளருக்கு அப்பீல் மனு அளித்து, மறுத்தது சரியில்லை என்றால், மீண்டும் பதிவுக்கு வருவார்