புத்தகம்-3 பத்திரங்கள்

புத்தகம்-3 பத்திரம்

சொத்துப் பத்திரமாக இருந்தாலும், அல்லது சொத்து சம்பந்தப்படாத பத்திரமாக இருந்தாலும், எல்லாப் பத்திரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம்.

பொதுவாக, பத்திரங்களை  மூன்று வகையாகப் பிரித்து உள்ளார்கள்.

இந்தப் புத்தகம்-3 பத்திரம்  என்பது, 1-வது புத்தகம், 4-வது புத்தகம்  இவைகளில் வராத  பத்திர வகையைச் சேர்ந்தது. இது ஒரு சிறப்பு வகை. இதில் உயில் பத்திரங்கள் மட்டும் அடங்கும். உயில் என்பது அசையாச் சொத்து சம்பந்தப்பட்டும்  இருக்கும் அல்லது சம்பந்தப்படாமலும்  இருக்கும். ஆனாலும், உயில் என்பது அதை எழுதி வைத்தவரின் இறப்புக்கு பின்னரே அது நடைமுறைக்கு வருவதால், அதை சிறப்பாக  புத்தகம்-3ல் பதிவு  செய்து வைப்பார்கள்.

உயிலும்  ஒரு தனிப்பட்ட பத்திரமாகும். இது பொதுப் பத்திர வகையை சேராது. எழுதிக் கொடுத்தவர் மட்டுமே அதன் நகலைப் பெற  முடியும், வேறு யாரும் அதைப் பெற்றுவிட முடியாது. அவரது இறப்புக்குப் பின்னர் அவரின் வாரிசுகள் அதன் நகலைப் பெறலாம்.

இதில் உயில், மற்றும்  உயிலை அடுத்து அதன் பின்  இணைப்பு எனச் சொல்லப்படும் “கொடுசில்” (Codicil) ஆகிய இரண்டும் சேரும். கொடுசில் என்றால்,  ஏற்கனவே எழுதிய உயிலில் ஏதாவது மாறுதல் செய்ய நினைத்தால், அந்த உயிலை அப்படியே இருக்கும் போதே, இந்த மாறுதல் பத்திரத்தை மட்டும் எழுதி அந்த உயிலுக்கு இணைப்பு என்று சொல்லி (Codicil) அதையும் ஒரு தனிப் பத்திரமாகப் பதிவு செய்வது. இதுவும் அதே புத்தகம்-3ல் தான் பதிவு செய்யப்படும்.

மேலும்,  Open Will  என்று சொல்லப்படும் வெளிப்படையாக எழுதி (யாரும் பார்க்கும்படி எழுதி) பதிவு செய்வது ஒரு வகை உயில். மற்றொன்று, அ்ந்த உயிலில் என்ன எழுதியுள்ளது என்று யாருக்கும் தெரியக் கூடாது. பத்திரப் பதிவாளர் கூட படிக்க முடியாது. இப்படி ஒரு ரகசிய உயிலை எழுதி வைப்பர் சிலர். ஏனென்றால், அந்த உயிலில் யாருக்கு என்ன கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று அந்த உயிலை எழுதி வைத்தவரைத்  தவிர யாருமே தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை. இதை ரகசிய உயில் அல்லது சீல் செய்யப்பட்ட உயில் (Will in a Sealed Cover) என்று சொல்வர். உயிலை எழுதி, அதை ஒரு கவருக்குள் போட்டு அதை ஒட்டி, சீல் செய்து, அவரின் அரக்கு முத்திரையையும் கூட பதித்து விடுவர். அந்தக் காலத்து மன்னர்கள் இரகசிய உத்திரவு அனுப்புவது போல. அந்தக் கவரை மட்டும் பதிவாளர் வாங்கி, “மூடிய உயில் என்று சொல்லப்பட்ட ஒரு கவரைப் பெற்றுக் கொண்டேன்” என்று சொல்லி அதை மட்டும் பதிவு செய்து கொள்வார். இதுவும் புத்தகம்-3ல் தான் பதிவு செய்யப்படும்.  இப்படிப்பட்ட மூடிய உறையுடன் கூடிய உயிலை, அவர்  இறந்த பின்னர், அவரின் வாரிசுகள், இறந்தவரின் இறப்புச் சான்றிதழுடன் ஒரு மனுக் கொடுத்து, அந்த மூடிய உறையை, இரண்டு சாட்சிகள் முன்னர்  பதிவாளர் திறந்து, அந்த உயிலை வழக்கமாகப் பதிவு செய்வது போலப் புத்தகம்-3-ல் அதற்கு ஒரு வரிசை எண் கொடுத்து பதிவு செய்து கொள்வார்.

பொதுவாக  உயில்களைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம்  இல்லை என்று பதிவுச் சட்டம் சொல்கிறது. மேலும் உயிலை ஒரு முத்திரைத் தாளில் எழுத வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால், உயில் என்பது அவசரத்துக்காக எழுதுவது. எனவே நடைமுறையை பின்பற்ற முடியாது. இருந்தாலும், இந்த உயிலை அவர்தான் எழுதினார், அல்லது அதைப்  படித்துப் பார்த்து, அல்லது படிக்கக் கேட்டு, கையெழுத்துச் செய்தார் என்றும், நல்ல மனநிலையில் இருந்தார் என்றும் உறுதி செய்து, இரண்டு தெளிவான சாட்சிகளும் அதில் கையெழுத்துச் செய்து இருக்க வேண்டும். அப்போது தான் அந்த உயில் செல்லுபடியாகும்.