ரியல் எஸ்டேட் சட்ட விதிகள் அறிவிப்பு!
RERA ரியல் எஸ்டேட் சட்ட விதிகள் அறிவிப்பு!
மனை விற்பனை முகவர்கள் ஒழுங்குமுறை ஆணையத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்…
ரியல் எஸ்டேட் சட்ட விதிகள் அறிவிப்பு மனை விற்பனை முகவர்கள் ஒழுங்குமுறை ஆணையத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்
சென்னை: ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்ட விதிகள் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மனை விற்பனை முகவர்கள் கட்டாயம் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்விதிகள் நடந்து வரும் மற்றும் எதிர்கால திட்டங்கள் அனைத்துக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை மத்திய அரசு கடந்த மே 1ம் தேதி முதல் நடைமுறைப் படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசும் தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்துதலும் மேம்படுத்துதலும்) விதிகள் 2017 உருவாக்கியுள்ளது.
அதன்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது அவரது பிரதிநிதி, செயலாளர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் செயலாளர், சட்டத்துறை ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு ஒழுங்குமுறை குழுமத்தின் தலைவர் மற்றும் குழுமம்/தீர்ப்பாயத்தின் இரண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உரிய பரிந்துரைகளை வழங்கும். அதுவரை இடைக்கால ஏற்பாடாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு செயலாளர் குழுமமாக செயல்படுவார்.
தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்துதலும் மேம்படுத்துதலும்) விதிகள், 2017 முக்கிய அம்சங்கள் வருமாறு: 500 சதுரமீட்டர் நிலப்பரப்பளவு அல்லது எட்டு அலகுகளுக்கு மேல் உள்ள அனைத்து கட்டிட மனை விற்பனையில் ஈடுபடும் முகவர்கள் மற்றும் அத்தகைய திட்டங்கள் குழுமத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். இவ்விதிகள் நடந்து வரும் திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.
குழுமத்தில் பதிவு செய்யாமல் எந்தவொரு கட்டிட மனை விற்பனை செய்ய இயலாது. ஒதுக்கீட்டாளரிடமிருந்து திட்டத்திற்காக வசூலித்த 70 சதவீத தொகையை திட்டத்திற்காக தனிக் கணக்கு துவக்கி வைப்பீடு செய்து அக்குறிப்பிட்ட திட்டம் மற்றும் கட்டிட செலவுக்கு அதனை பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு மேம்பாட்டாளர் தனது திட்டத்திற்கு உண்டான நிலம் எவ்வித வில்லங்கமும் இல்லை என்பதற்கும் அந்நிலத்திற்கு உண்டான சட்டபூர்வமாக உரிமை பெற்றவர் என உறுதிமொழி பத்திரம் அளிப்பதுடன் அத்திட்டம் நிறைவு பெறும் காலத்தையும் குறிப்பிட்டு பிரமாண பத்திரத்தில் சான்றளிக்க வேண்டும்.
எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் இல்லாமல் ஒதுக்கீட்டாளரிடமிருந்து திட்ட மதிப்பீட்டில் 10 விழுக்காட்டிற்கு அதிகமாக பணம் பெறக் கூடாது. அப்பத்திரத்தில் அலகின் மொத்த மதிப்பினையும் குறிப்பிட்டு பெற வேண்டும். ஒதுக்கீட்டிற்குபின் ஐந்து வருட காலத்திற்குள் கட்டுமானத்திலோ, வேலைப்பாட்டிலோ, தரத்திலோ, சேவையிலோ ஏதேனும் குறைபாடு இருப்பின் அதனை மேம்பாட்டாளர் தனது சொந்த செலவில் 30 நாட்களுக்குள் சரி செய்து தரவேண்டும்.
இச்சட்டத்தின் கீழ் குழுமம் அல்லது தீர்ப்பாளரால் பிறப்பிக்கப்படும் முடிவுகள் / செயலாணையால் பாதிக்கப்பட்ட எவர் ஒருவரும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யலாம். அம்மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் கொண்டிருக்கும். உறுப்பினர்களில் ஒருவர் நீதித்துறை சார்ந்த அலுவலராகவும் மற்றொருவர் நிர்வாகம் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த அலுவலராகவும் இருப்பார்.
இச்சட்டத்தின் கீழ் பல்வேறு அபராதங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அபராதங்கள் திட்டமதிப்பீட்டில் 10 விழுக்காடு அல்லது மூன்றாண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்தோ இச்சட்டத்தின் கீழ் விதிக்கப்படும். திட்ட மேம்பாட்டாளர் மற்றும் நுகர்வோர் இருதரப்பிலும் தங்கள் கடமையில் தவறும்பட்சத்தில், ஒரே விதமான விழுக்காட்டில் வட்டி செலுத்த வேண்டியது கட்டாயமாகும். தமிழக அரசின் கட்டிட, மனை விற்பனை ஒழுங்கு முறை குழுமம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் அந்தமான் மற்றும் நிக்கோபர் யூனியன் பிரதேசத்தினையும் இணைத்துக் கொள்ள இம்மாநில அரசின் இசைவினை மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. குழுமத்தின் அலுவலகம் சென்னை எழும்பூரிலுள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையின் மூன்றாம் தளத்தில் தற்காலிகமாக இயங்கும்.
நன்றி : தினத்தந்தி