வெளிநாட்டில் வசிப்பவர்களும் வீட்டு மனை வாங்கலாம்

வெளிநாட்டில் வசிப்பவர்களும் வீட்டு மனை வாங்கலாம்...



வெளிநாடுகளில்  வசிக்கும் நம் நாட்டவர் தமது ஊரில் சொந்த வீட்டை கட்ட விரும்புவது வழக்கம். உள் நாட்டில் வசிப்பவர்கள் எந்த ஊரிலும் சொந்த வீடு கட்டுவது எளிதானது. ஆனால் அவர்களே வெளிநாட்டில் வசித்தால், மனை வாங்குவது அதில் சொந்த வீடு கட்டுவது ஆகியவற்றில் பலவித சட்ட திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. 

பல குடும்பங்களில்  வெளிநாட்டு வேலை பார்க்கும் குடும்ப அங்கத்தினர்கள் இருப்பார்கள். தமது குடும்ப நலனுக்காகவும், சேமிப்பாகவும் வீடு அல்லது மனை வாங்க அவர்கள் விரும்பும்போது, நடைமுறையில் எவ்வகையிலான சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

முக்கியமான வாடிக்கையாளர்        வெளிநாட்டில் வசிப்பவர்களும் வீட்டு மனை வாங்கலாம்

இந்தியாவில்  மனை வாங்க அல்லது வீடு கட்ட விரும்பும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு கடன் தர, நிதி நிறுவனங்கள் எளிமையான நடைமுறைகளை கொண்டுள்ளன.

என்.ஆர்.ஐ. எனப்படும்  அவர்களை நிதி நிறுவனங்கள் தங்களது முக்கியமான வாடிக்கையாளராக கருதுகின்றன. ஏனெனில், வீட்டு கடனை  சரியான நேரத்தில் அவர்கள் திருப்பி செலுத்துவதற்கு பொருளாதார ரீதியாக அனைத்து வாய்ப்புகளும் உள்ளதை நிதி நிறுவனங்கள் கணக்கில் கொள்கின்றன.

வங்கி கடன்     வெளிநாட்டில் வசிப்பவர்களும் வீட்டு மனை வாங்கலாம்

வெளிநாட்டு வாழ் இந்தியர் வீட்டு மனை வாங்க அல்லது வீட்டு கடன் பெற விண்ணப்பம் செய்திருந்தால் மனையின் மதிப்பில் அல்லது வீட்டின் மதிப்பில் 80 சதவீதம் கடனாக கிடைக்கும். திருப்பிச் செலுத்தும்போது அவர்கள் இருக்கும் நாட்டிலிருந்தே என்.ஆர்.ஓ அல்லது என்.ஆர்.இ ஆகிய வங்கி கணக்குகள் மூலம் செலுத்தலாம். ஏற்கனவே அவர்கள் உள்நாட்டில் வாடகை அல்லது ‘டிவிடெண்ட்’ மூலம் வருமானம் பெறக்கூடியவர்களாக இருந்தால் அதன் மூலமாகவும் வங்கி கடனை நேரடியாக திருப்பிச் செலுத்தலாம்.


வரிகள் மற்றும் சலுகைகள்

வங்கி கடன்  பெறும்பட்சத்தில் வங்கி கணக்கு மூலமாகவே அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை திருப்பி செலுத்த வேண்டும். வீடு அல்லது மனையை பதிவு செய்யும்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் மற்றும் வரிகள் ஆகியவற்றோடு என்.ஆர்.ஐ என்பதற்கான வரிச்சலுகைகளும் அவர்களுக்கு உண்டு. 

வீட்டுக் கடனுக்கு  வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் செலுத்தும் வட்டித்தொகைக்கு வரி செலுத்துவதில் விலக்கு உண்டு. வாங்கிய வீடு அல்லது மனையை விற்கும்போது, வருமானவரி சட்டத்தின் கீழ் ‘கேபிட்டல் கெயின்’ வரியை அவர்கள் செலுத்த வேண்டும்.

எவற்றை வாங்கலாம்..?

1. விவசாய நிலம்,  தோட்ட வீடு, பண்ணை வீடு மற்றும் விவசாயம் சார்பான சொத்துக்கள் தவிர, மற்ற அசையா சொத்துக்களை வாங்கலாம்.

2. இந்தியாவில் வாழும்  இந்திய குடிமக்களிடம் இருந்தும், வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களிடம் இருந்தும், வெளிநாட்டில் வாழும் இந்திய வம்சாவளியை சார்ந்தவர்களிடம் இருந்தும், இந்தியாவில் உள்ள அசையா சொத்துக்களை அவர்கள் அன்பளிப்பாக பெறலாம்.

3. வெளிநாட்டு வாழ்  இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்களது பரம்பரை சொத்துக்களை பெறுவதற்கு அனுமதி உண்டு.

4. தங்களுக்கு  சொந்தமான அசையா சொத்துக்களை, அவர்களது விருப்பப்படி இந்தியாவில் வசிப்பவர்களுக்கு விற்பனை செய்யலாம்.

5. வெளிநாட்டு வாழ்  இந்தியர்கள், இந்தியாவில் இருக்கும் தங்களது விவசாய நிலங்கள், பண்ணை வீடுகள் மற்றும் விவசாயம் சார்ந்த நிலங்கள் போன்றவற்றை, இந்தியாவில் வாழ்பவர்களுக்கு அன்பளிப்பாகவோ அல்லது கிரையமாகவோ வழங்கலாம்.

6. தங்களுக்கு  சொந்தமாக இந்தியாவில் இருக்கும் வீடு அல்லது காலிமனையை வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களுக்கு அல்லது இந்திய வம்சாவளியினருக்கு அன்பளிப்பாகவோ அல்லது கிரையமாகவோ அவர்கள் தரலாம்.