பாகப் பிரிவினையை பதியாவிட்டால் பிரச்சினை வரும்

பாகப் பிரிவினையை பதியாவிட்டால் பிரச்சினை வரும்.


சொந்தங்களுக்குள்  பாகப் பிரிவினை நடந்தாலும் பதிவு செய்யாவிடில்  சந்ததியினருக்கு பிரச்சினை வரும் என நீதிபதி மோகன்ராம் பேசினார்.

செஞ்சி தாலுகா பாலப்பாடியில் செஞ்சி வட்ட சட்டபணிகள் மூலம் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி மோகன் ராம் பேசியதாவது:சிவில் வழக்குகளில் பெரும்பகுதி ஆவணங்களின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.  இரு தரப்பிலும் ஆவணங்கள் இல்லாத நிலையில் தான் சாட்சிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். பல இடங்களில் பட்டா வழங்க மறுப்பதாக புகார் கூறுகின்றனர். முதலில் பட்டா கோருபவருக்கு என்ன உரிமை, எந்த வழியில் உரிமை என்பதை பரிசீலிப்பார்கள். 100 ரூபாய்க்கு மேல் உள்ள சொத்துக்களை  கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத ஆவணங்களை  கொண்டு உரிமை கோர முடியாது. 

கிராமங்களில்  80 சதவீதம் பாகப் பிரிவினையை  கூறு சீட்டு மூலம் தீர்த்து கொள்கின்றனர். இதை 2 ரூபாயில் இருந்து 50 ரூபாய் பத்திரத்தில் எழுதி வைத்துக் கொண்டு  எனக்குத் தான் சொந்தம் என்று சொன்னால் அதை சட்டம் ஏற்றுக் கொள்ளாது.இப்போது சொத்தை சரியாக பாகம் பிரித்து இருப்பீர்கள். பின்னாளில் ஒருவருக்கு கொடுத்த பாகத்தின் மதிப்பு திடீரென உயர்ந்து விடும். பதிவு செய்யாத சொத்தாக இருந்தால்  அதில் மற்றவர் உரிமை  கோரி கோர்ட்டை அணுகுவார்.

நிலத்தை நீங்கள் 150  ஆண்டுகள் அனுபவித்து இருந்தாலும் இதற்காக வி.ஏ.ஓ.,விடம் வரி செலுத்தி ரசீது வாங்கி இருக்க வேண்டும். வேறு நபர் பல ஆண்டுகள் வரி செலுத்தி ரசீது வைத்திருந்தால் அவருக்கு சாதகமாக இருக்கும். தகவல் அறியும் சட்டத்தில் விவரம் கேட்கும் போதும், கோரிக்கை மனுக்கள் அனுப்பும் போதும் மனுவின் நகலை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மனுக்களை பதிவு தபாலில்  அனுப்பினால் உங்களிடம் அனுப்பியதற்கு ரசீது இருக்கும். உயரதிகாரிக்கு பின்னாளில் புகார் தெரிவிக்க இந்த ஆதாரங்கள் உதவியாக இருக்கும். 

வீட்டில்  நடக்கும் பாகப் பிரிவினை, சொத்து கிரையம் வாங்குவதை ஆண்கள் அலட்சியமாக பதியாமல் இருந்தால், பெண்கள் விழிப்போடு இருந்து பதிய வேண்டும் என கணவருக்கு சொல்லுங்கள். பதிவு செய்தால் கட்டணம் வரும் என்பதற்காக, உறவுகள் தானே பிரச்சினை வராது, என்று இருந்தால், பின்னாளில் சந்ததியினருக்கு பிரச்சினை வரும். சந்ததியினர் ஏமாறாமல் இருக்க பாகப்பிரிவினையாக இருந்தாலும் பதிவு செய்யுங்கள்.

நன்றி
தினமலர்