பழைய பத்திரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம்
பழைய பத்திரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம்
தமிழகத்தில் 575 எண்ணிக்கையில் சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது.
கடந்த 2009 ஜூலை 6ம் தேதிக்கு பிறகு அனைத்து பத்திரப்பதிவுகளும் கணினி வழியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனால், அந்த பத்திரங்கள் நகல் பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்கள் நகல்களை எளிதாக பெற முடிந்தது. அந்த நகல்களை சிடியில் பதிவு செய்தும் பதிவுத்துறை சார்பில் தரப்படுகிறது.
இந்த நிலையில், 1865 முதல் 2009 ஜூலை 5ம் தேதி வரை பதிவான பத்திரங்கள் அனைத்தும் தற்போது வரை நகல்களாக உள்ளன. இந்த நகல்களை தேடி கண்டுபிடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது.
இதனால், நகல் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் அலைக்கழிப்படுவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து 1865 முதல் 2009 வரை உள்ள நகல்களை கணினியில் பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ரூ.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பதிவுத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.
இதில் தேர்வு செய்யப்படும் நிறுவனங்களிடம் பழைய ஆவணங்கள் ஒப்படைக்கப்படும். அந்த நிறுவனங்கள் கணினியில் ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் பணியை மேற்கொள்ளும். இப்பணிகளை டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்கவும் பதிவுத்துறை திட்டமிட்டுள்ளது.