பத்திரப் பதிவுக்கு பான் எண் அவசியம்: தமிழக அரசு
வணிகவரித்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருமானவரிச் சட்டம் 1962-இன் படி, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பதிவு செய்யப்படும்போது பத்திரப்பதிவுடன் 'பான்' எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவிலான சொத்துக்கள் பதிவு செய்யப்படும் போது அந்த தகவல்கள் வருமான வரித்துறையுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி பத்திரப்பதிவு படிவம் 60 மற்றும் 61-ஏ படிவங்கள் இணையதளத்தில் இருப்பதாகவும், அதில், குறிப்பிட்டுள்ளபடி முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறையிடம் பகிர்ந்து கொள்ளப்படும் பட்சத்தில், வருமானவரி கணக்கு தாக்கலின் போது சொத்துக்கள் யார் பெயரில் பதியப்பட்டுள்ளது என்பதை பார்க்க முடியும் என வருமான வரித்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், வருமானவரி தாக்கலின் போது சொத்துக்களின் மொத்த மதிப்பை குறிப்பிடப் படாவிட்டால், சொத்து பதிவு செய்யப்பட்ட அல்லது விற்பனை செய்த நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.