சட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா?
சொத்தில் பங்கு உண்டா..?
ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று சில பேருக்கு பொதுவாய் தெரிகிறது. “மகிழ்ச்சி”. ஆனால் பெண்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறது என்ற அடிப்படைகளைக் கூட இன்றைய பெண்கள் எவரும் அறிந்திருக்கவில்லை.
நமது சட்ட முன்னோர்களும் அரசாங்கமும் எத்தனையோ நல்ல சட்டங்களையும் இயற்றியுள்ளார்கள்.
பெண்களுக்கான சொத்துரிமை என்ன?
திருமணத்தின் போது கொடுக்கப்படும் நகைகளும், சீர்வரிசைகளும் மட்டுமே பெண்களுக்கான சொத்து என்று ஒரு காலத்தில் இருந்தது.
ஆனால் பெண்களுக்கான சொத்துரிமையை 1956ல் இந்து வாரிசு உரிமைச் சட்டப்படி சொத்து உரிமைகளை நிலை நாட்டியது என்றால் மிகையில்லை.
இந்த சட்டம் வருவதற்கு முன்பு ‘இந்து பெண்கள் சொத்து சட்டம்’ என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு, பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.
1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட ‘இந்து வாரிசு உரிமை சட்டம்-1956’ பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது.
உதாரணமாக ஓர் இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில், அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும்.
இதில் அனைவருக்கும் சம உரிமை உண்டு. அதன் பிறகு 1956- சட்டத்தில் சில மாற்றங்கள் வந்தன. 1989-ல் மேலும் சில மாற்றங்கள் வந்தது.
ஆனாலும் 09.09.2005-ல் மத்திய அரசாங்கம் கொண்டு வந்த சட்டமே ஒரு தெளிவை தந்தது. அவற்றை கொஞ்சம் விரிவாக பார்க்கலாமா..?
சொத்துகளின் வகைகள் என்ன..?
சொத்துரிமைகள் பற்றி தெரிந்து கொள்ளும் முன்னர் சொத்துகளின் வகைகளையும் அவற்றின் விளக்கங்களையும் ஓரளவு அறிந்து கொள்ளுதல் அவசியம். பாட்டன் முப்பாட்டன் வழி வந்த சொத்துகளே பூர்வீக சொத்துகள். அதைத்தான் பூர்வீக சொத்துகள் என்று சட்டம் சொல்கிறது.
ஆனால் ஒருவர் தன் சுய சம்பாத்தியத்தில் அவரது வாழ்நாளில் வாங்கிய சொத்துகளை தனிப்பட்ட சொத்தாக உரிமை கொண்டாடவும், அவர் விருப்பப்படி அனுபவிக்கவும் சுய விருப்பத்தின் பேரில் தன் சொந்தங்களுக்கு எழுதி வைக்கவும் முழு உரிமை உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதையே தனிப்பட்ட சொத்தாக சட்டம் வரையறுக்கிறது.
பாகப்பிரிவினை என்றால் என்ன?
"பாகப்பிரிவினை”, நடிகர் திலகம் நடித்து பீம்சிங் இயக்கிய அருமையான திரைப்படம் என்று தெரியும். ஆனால் சட்டத்தின் பார்வையில் பூர்வீக சொத்துகளை அவரது வாரிசுகள் முறைப்படி பிரித்துக் கொள்வதே பாகப்பிரிவினை என்று விவரிக்கப்பட்டுள்ளது.
பூர்வீக சொத்துகளை மட்டுமே பாகப்பிரிவினை செய்ய இயலும்.