பஞ்சாயத்து அங்கீகார மனைகளுக்கு டிடிசிபி அங்கீகாரம் பெறுவது எப்படி?

பஞ்சாயத்து அங்கீகார மனைகளுக்கு டிடிசிபி அங்கீகாரம் பெறுவது எப்படி?


கடந்த முப்பது ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்ட பஞ்சாயத்து அங்கீகார மனைகள், நான் அப்ஜெக்ஷன் சான்றிதழ் (NOC) மனைகள், அன்அப்ரூவ்டு மனைகள் ஆகியவை பதிவு செய்வதை சென்னை உயர்நீதி மன்றம் 2016 அக்டோபரில் தடை செய்தது.

அதன் பிறகு 2017 வரை மேற்படி மனைப் பிரிவுகளை வாங்கவோ, விற்கவோ முடியாமல் பத்திரப் பதிவு அலுவலகங்களில் பதிவும் செய்ய முடியாமல் அப்படியே நிலுவையில் இருந்தது.

2017 இறுதியில் அரசு ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், மேற்படி இடங்களில் மனை வாங்கியவர்களின் தொடர் கோரிக்கைகளை ஏற்று வரன்முறைப் படுத்துதல் அரசு உத்தரவை (அரசாணை எண்.78) போட்டது.


மேலும் அந்த  அரசாணையின் சில முடிவுகள் கள நிலவரத்தோடு ஒத்துப் போகவில்லை. வரன்முறைப்படுத்துதல் கட்டணமும் அதிகமாக இருந்தது. மக்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களின் தொடர் கோரிக்கைகள் ஏற்று மேற்கண்ட அரசாணையில் அரசு திருத்தங்களை கொண்டு வந்தது.

.வரன்முறைப் படுத்துதலுக்கான தேதியை  டிடிசிபி (DTCP) அலுவலகம் இதுவரை பல முறை கெடு வைத்து, விண்ணப்பங்களைப் பரிசீலித்து வருகிறது. தமிழகம் முழுதும் அதிக அளவில் மனைப் பிரிவுகள் இருப்பதால் அவற்றை எல்லாம் வரன்முறைப்படுத்த இன்னும் கால அவகாசம் டிடிசிபி அலுவலகம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்போது  கொரொனாவும் சேர்ந்த கொண்டதால் நிச்சயம் கால அவகாசத்தில் தளர்வுகள் இருக்கும். எனவே இது தொடர்பான பணிகளைச் செய்ய காத்திருக்க வேண்டி இருக்கலாம். அரசு அலுவலகங்கள் முழுமையாக இயங்கத் தொடங்கினால் மட்டுமே இதற்கான முயற்சிகளை நாமும் மேற்கொள்ள முடியும். இப்போது அது தொடர்பான செய்திகளைத் தெரிந்து வைத்துக் கொள்ளலாம்.

உங்களிடம்  இருக்கும் மனைகள் இரண்டு முறைகளில் வரன்முறைப் படுத்தப்படுகிறது. 

அவை,
அ) புரோமோட்டர் வரன் முறைப்படுத்தல்
ஆ) மக்கள் வரன்முறைப் படுத்தல்
மனைப் பிரிவுகளை உருவாக்குபவர் தன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தது போக விற்பனையாகாமல் மீதி இருக்கும் மனைகளை வரன்முறை செய்தல், புரோமோட்டர் ரெகுலேஷன் ஸ்கீம் ஆகும்
மனைகளை வாங்கிய பொதுமக்கள் தங்கள் மனைகளை மட்டும் வரன்முறைப்படுத்துதல் இன்னொரு வகையாகும்


மக்கள் மனைகள் வரன்முறைப் படுத்துதலை பார்ப்போம்.


இதற்கு,  முதலில் டிடிசிபி அலுவலகம் சென்று உங்களது மனைகளுக்கு வரன்முறைப்படுத்துதல் அங்கீகாரம் கிடைக்குமா? அல்லது மேற்படி மனைகள் தற்காலிகமாக தடை செய்யப் பட்ட பகுதிகளில் வருகிறதா (மலை, நீர்நிலை போன்று) அதனால் மனு செய்தால் கிடைக்குமா, கிடைக்காதா எனபது போன்ற நிலவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

பிறகு tnlayouts.com  என்கிற இணைய தள லிங்கில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேற்படி லிங்கில் 4 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். அவை,
1. தனி மனைக்கான டிடிசிபி உள்நுழைவு
2. முழு மனைப்பிரிவிற்கான டிடிசிபி அங்கீகார நுழைவு
3. தனி மனைக்கான சிஎம்டிஏ உள்நுழைவு
4. முழு மனைப் பிரிவிற்கான சிஎம்டிஏ உள்நுழைவு

இவற்றில்  தங்களுக்கு தேவையான லிங்கில் சென்று விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும். மேற்படி விண்ணப்பம் செய்வதற்கு ஒரு மனைக்கு ரூ. 500 ஆகும்.
பொறியாளரை வைத்து தங்கள் மனையை மட்டும் மனைப் பிரிவில் இருந்து தனித்துக்  காட்டி வரைபடம், அம்மோனியா பிரின்டில் தயார் செய்ய வேண்டும். மேற்படி வரைபடம் அரசின் சர்வே எண் புலப் படத்தோடு மிகச் சரியாக பொருந்த வேண்டும். இந்த வரைபடத்தை A 3 அளவில் 3 புளு பிரின்ட் எடுக்க வேண்டும்.
மேற்கண்ட வரைபடம் மற்றும் நம் ஆவணம், மூல ஆவணம், சிட்டா, அடங்கல், பட்டா, புலப்படம் ஆகியவற்றில் நோட்டரி வழக்கறிஞர் கையொப்பம் பெற வேண்டும்.
மேற்படி மனைகளுக்கு தங்கள் பெயரில் பட்டா  கட்டாயம் மாறி இருக்க வேண்டும். குறைந்தது, கூட்டுப் பட்டாவில் ஆவது தங்கள் பெயர் இருக்க வேண்டும்.

மனை, நஞ்சையில் இருந்து இது வரை பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் இருந்தால், கிராம நிர்வாக அலுவலர் (VAO) வரன்முறை அங்கீகாரம் வாங்கி வந்தால் பட்டா தருகிறேன் என்கிறார். பட்டா இல்லாமல் அங்கீகாரம் கொடுத்தால் சட்ட குழப்பங்கள் வரும். இது சென்னையை சுற்றி உள்ள பகுதிகளின் கள நிலவரம். இதற்கு அரசு தெளிவான வழிகாட்டுதலை கொடுக்க வேண்டும்.

மேற்படி ஆவணங்கள் அனைத்தும் வைத்து டிடிசிபி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். .அவர்கள் அதனை சரி பார்த்து முத்திரையிட்டு உள்ளாட்சித் துறைக்கு அதாவது ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி/ பேரூராட்சிக்கு அனுப்பி வைப்பார்கள்.
பிறகு உள்ளாட்சித் துறை அலுவலகத்தில், நம் விண்ணப்பத்தின் அடிப்படையில் மனைக்கான வரன்முறைக் கட்டணத்தை செலுத்த வேண்டும். 

பிறகு அங்கிருந்து மீண்டும் டிடிசிபி அலுவலகத்திற்கு நம் விண்ணப்பம் செய்ய வேண்டும். .அங்கு நம்முடைய வரைபடத்தில் டிடிசிபி முத்திரையிட்டு அங்கீகார எண்ணும் வழங்குவார்கள்.


நன்றி:
பரஞ்சோதிபாண்டியன்