வாடகைதாரருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் ஒப்பந்தம் அவசியமா?

வாடகைதாரருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் ஒப்பந்தம் அவசியமா?

சென்னையில்  மற்ற நகரங்களைவிட வாடகைதாரர்கள் அநேகர் இருப்பார்கள். அதுபோல மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னையில்தான் வீட்டு வாடகையும் கூடுதல். அதுபோல வாடகை வீட்டுப் பிரச்சினைகளும் சென்னையில்தான் அதிகம்.

 அடிப்படை  வசதிகள் கூட இல்லாது நான்கு சுவர்களை மறித்து வீடு என்று சொல்லும் அவலம் சென்னையில் நடக்கிறது. இவை அல்லாது பராமரிப்புச் செலவு என்ற பெயரில் கூடுதலான தொகையும் வசூலிக்கப்படுகிறது. தனி மின் இணைப்பு இல்லாத வீடுகளில் மின் கட்டணம் மிக அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

இது  போன்று வாடகைதாரருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் இடையிலான முரண்பாடுகள் மிக அதிகம்.  இதற்கு முக்கியமான காரணம் சட்ட ரீதியிலான தெளிவு இல்லாதது.

வாடகைதாரர்  வீட்டு உரிமையாளார் முரண்பாட்டைத் தவிர்க்க ஒப்பந்தப் பத்திரம் எழுதிக்கொள்வது அவசியம். ஏனெனில் அதிலேயே பல முரண்பாடுகள் தீர்க்கப்படும். அதாவது வாடகை, பராமரிப்புத் தொகை, கரண்ட் பில், ஒயிட் வாஷ், அட்வான்ஸ் ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். முரண்பாடு ஏற்படும்போது அட்வான்ஸ் தொகையை இருவரும் மாற்றிச் சொல்லக்கூடும். மேலும் ஒயிட் வாஷ் அடிப்பது எங்கள் பொறுப்பு இல்லை என வீட்டு உரிமையாளர் மறுக்கக்கூடும். வாடகைதாரர் ஒயிட் வாஷ் தொகையைக் கொடுக்க வேண்டும் என்றால் அதைப் பத்திரத்தில் குறிப்பிட்டால் பிரச்சினை இல்லாமல் போய்விடும்.

வாடகை  வீட்டு உரிமையாளார் ஒப்பந்தப் பத்திரம் 20 ரூபாய் முத்திரைத்தாளில் அங்கீகரிக்கப்பட்ட முத்திரை விற்பனையாளரிடம் வாங்கி வாடகைதாரர் – உரிமையாளர் பரஸ்பர சம்மதத்தின் பேரில் நிரப்ப வேண்டும். இருவரின் நிரந்தர முகவரியும் அதில் குறிப்பிடப்பட வேண்டும். 


மேலும்  இந்த ஒப்பந்தம் 11 மாதத்துக்குத்தான் போடுவார்கள். 11 மாதத்திற்கு ஒருமுறை அதைப் புதுப்பித்துக் கொள்ளலாம். 11 மாத காலத்துக்கு மேற்பட்ட பத்திரப் பதிவுகளைப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்பதால் வீட்டு வாடகைப் பத்திரங்கள் 11 மாத கால அளவில் போடப்படுகின்றன.

வீட்டுக்கான  முன்பணத்தைப் பொறுத்தவரை அதற்கு ஒரு தெளிவான வரையறை இல்லை. அது ஒவ்வொரு நகரங்களுக்கும் வித்தியாசப்படுகிறது. சென்னையில் ஐந்து மாத வாடகையை முன்பணமாக வாங்குவர்களும் உண்டு. 10 மாத வாடகையை முன்பணமாக வாங்கிபவர்களும் உண்டு.


 சாமர்த்தியத்தின் அடிப்படையிலேயே  முன்பணம் நிர்ணயிக்கப்படுகிறது. வீட்டு வாடகையைப் பார்த்தீர்கள் என்றால் அது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. நாம் வாங்கும் சம்பளத்தில் பாதித் தொகையை வீட்டு வாடகைக்குக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

மேலும்  உங்கள் வாடகை தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தை அணுகலாம். உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஒருவர் குடி வருகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் குடி வந்த பிறகு அருகில் உள்ள வீட்டு வாடகைக் கட்டணங்கள் மிகக் குறைவாக இருக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் நீதிமன்றத்தை அணுகலாம்.

அதுபோல  வாடகை கொடுக்கும்போது ரசீது பெற்றுக்கொள்வது அவசியம். இதற்கான ரசீது புத்தகங்கள் ஸ்டேஷனரி கடைகளில் கிடைக்கின்றன. வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்றால் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத்தில் உள்ளவர்கள், முன்சீப் நீதி மன்றங்களை நாடலாம்.


தண்ணீர்,  மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகளை நிறுத்துவதற்கு உரிமையாளருக்கு உரிமை இல்லை. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். இம்மாதிரியான வழக்குகள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுத் தீர்வு காணப்படும். இதுபோன்ற தொந்தரவுகளால் வாடகைதாரருக்கு ஏதேனும் இழப்பு இருக்கும் பட்சத்தில் உரிமையாளர் அதற்குரிய இழப்பீடைத் தர வேண்டும்