மனையின் உரிமையை நிலைநாட்டும் அரசாங்க பதிவேடுகள்

மனையின் உரிமையை நிலைநாட்டும் அரசாங்க பதிவேடுகள்

சொந்த  வீட்டை கட்டியாக வேண்டும் என்ற லட்சிய கனவுடன் வீட்டுமனைகளை வாங்குவது அல்லது முதலீட்டு அடிப்படையில் வீட்டுமனை அல்லது மற்ற வகை நிலங்களை வாங்குவது என்ற இருவகையில் பெரும்பாலான நடுத்தர மக்களின் சொத்துக்கள் வாங்கப்படுகின்றன.

 சொத்துக்கள் எந்த வகை நிலமாக இருந்தாலும் அதன் மூலப்பத்திரங்களின் அடிப்படையிலும், வில்லங்க சான்றிதழின் அடிப்படையிலும் அவற்றை வாங்குவது பொதுவாக தீர்மானிக்கப்படுகிறது.

வாங்கப்படும்  சொத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் வாங்குபவர் மற்றும் விற்பவர் முன்னிலையில் இரண்டு சாட்சிகளுடன் பதிவு செய்யப்படுவது நடைமுறை. அத்துடன் சொத்து வாங்குவது பற்றிய விஷயம் முடிந்து விட்டதாகத்தான் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். 

வீட்டுமனையாக  இருந்தாலும் பிறவகை நிலமாக இருந்தாலும் அரசாங்கத்தில் அவை பற்றிய விபரங்கள் பலவையான பதிவேடுகளாக தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அவற்றைப்பற்றி அறிந்து கொண்ட பிறகே ஒரு சொத்தை வாங்குவது எல்லா விதங்களிலும் பாதுகாப்பாக இருக்கும் என்பது நிபுணர்களது கருத்தாகும். அரசாங்கத்தால் பராமரிக்கப்படும் நிலம் சார்பான முக்கிய பதிவேடுகள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

அரசாங்க பதிவேடுகள்

சொத்துக்கள்  வீட்டுமனை உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகள் உள்ள நிலம் ஆகிய எந்த வகையாக இருந்தாலும் அவை பத்திரப்பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகிய அரசின் இரண்டு துறைகளால் பலநிலைகளில் பதிவேடுகளாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

ஒரு சொத்து  வாங்கப்படுவதற்கு முன்பாகவே அதன் எல்லாவிதமான விபரங்களும் அரசின் பதிவேடுகளில் பல நிலைகளில் இருக்கும் என்பது தெரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் சொத்துக்கள் வாங்கப்படும்போது தவறுகள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.

பதிவுத்துறை பதிவேடுகள்

வீட்டுமனை  உள்ளிட்ட சொத்துக்கள் வாங்கப்படும்போதும் விற்கப்படும் போதும் அவை பத்திரங்களாக பதிவு செய்யப்படுவது இங்குதான். சொத்து பற்றிய பழைய ஆவணங்கள், அதன் உரிமையாளர், எவ்வகையான நிலம் போன்ற தகவல்கள் அங்கு இருக்கும். சொத்து பற்றிய தற்போதைய நிலை என்ன என்பதை அறிய உதவும் வில்லங்க சான்றிதழை இங்குதான் விண்ணப்பித்து பெற வேண்டும்.

வருவாய்த்துறை பதிவேடுகள்

ஒவ்வொரு  மாவட்டமும் பல வட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கும். அவை பல கிராமங்களாக பிரிக்கப்பட்டு அவற்றின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாக இருக்கும். அந்த பகுதிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு இலக்கம் தரப்பட்டிருக்கும். அதுதான் சர்வே எண் ஆகும். மேலும் வருவாய்த்துறையால் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் தகவல்கள் பற்றி இங்கே காணலாம்.

பட்டா

நிலத்தின்  உரிமை யாருக்கு என்பது பட்டாவை வைத்துத்தான் உறுதி செய்யப்படுகிறது. அதில் மாவட்டம், வட்டம், கிராமம் ஆகியவை பற்றிய சகல தகவல்களும் இருக்கும். மேலும் பட்டாவின் எண், உரிமையாளர் பெயர், சர்வே எண் மற்றும் அதன் உட்பிரிவு எண், நிலம் விவசாய நிலமா அல்லது வீட்டு மனையா, நிலத்தின் அளவுகள், செலுத்தப்படும் வரி விபரங்கள் ஆகிய தகவல்கள் பட்டாவில் இருக்கும்.

சிட்டா

ஒரு  தனிப்பட்டவருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் உள்ளது என்பதற்கான அரசாங்கத்தின் பதிவேடு இது. இதில் வரி கட்டிய விபரம், உரிமையாளர் பெயர், நிலத்தின் பயன்பாடு ஆகியவை இருக்கும்.

அடங்கல்

ஒரு கிராமத்தில் இருக்கும் ஒட்டு மொத்த சர்வே எண்கள் அனைத்தும் அடங்கிய தொகுப்புதான் இதுவாகும். நிலத்தின் உரிமையாளர், எவ்வகை நிலம், அதன் பயன்பாடு ஆகியவை இதில் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை

சுருக்கமாக  இது ‘எப்.எம்.பி’ என்று சொல்லப்படும். குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கான நிலத்தின் அமைவிடம் எங்கே உள்ளது என்பதை குறிப்பிடுகிறது. அதன் நான்கு புறமும் இருக்கக்கூடிய நிலப்பரப்பை பற்றி இதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

மனையின்  உரிமையை நிலைநாட்டும் அரசாங்க பதிவேடுகள்.