ரியல் எஸ்டேட்டில் 'ஏன்' முதலீடு செய்ய வேண்டும்..? நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 உண்மைகள்..!
30 வருடங்களுக்கு முன்பு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது என்பது ஒரு ஆடம்பரமாகக் கருதப்பட்டது. நடுத்தர வர்க்கத்தினர் ஆடம்பரமாகக் கருதப்பட்ட இந்த ரியல் எஸ்டேட் தற்போது லாபகரமான தொழிலில் முன்னணியில் இருப்பதால் தற்போது நடுத்தர வர்க்கத்தினர் முதல் பணக்கார்கள் வரை பயமின்றி ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து வருகின்றனர்.
பங்குச்சந்தை, மீயூச்சுவல் பண்ட் போல் போட்ட முதலுக்கு நஷ்டமின்றி இருப்பதோடு பல மடங்கு லாபம் கியாரண்டி என்பது ரியல் எஸ்டேட் துறையில் மட்டுமே உள்ளது. இது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒருசில உண்மைகளை இங்கு பார்ப்போம்.
பாதுகாப்பான தேர்வு
வீட்டை விடப் பாதுகாப்பான இடம் ஒரு மனிதனுக்கு இல்லை. அதேபோல் அந்த வீட்டில் செய்யப்படும் முதலீடும் பாதுகாப்பானது. பங்குச்சந்தை மற்றும் கமாடிட்டி தொழிலில் நாம் போடும் முதலீடு மிகக்குறைந்த நாட்களில் பலமடங்கு உயரும் வாய்ப்பு இருக்கின்றது. அதே நேரத்தில் நாம் செய்யும் முதலீடு ஜீரோ ஆகும் அபாயமும் அதில் உள்ளது. ஆனால் ரியல் எஸ்டேட்டை பொருத்தவரை நாம் வாங்கிப் போட்ட மனையோ வீடோ கண்டிப்பாக ஒருசில வருடங்களில் உயருமே தவிர குறைந்ததாகச் சரித்திரம் இல்லை.
ஏகப்பட்ட பைனான்ஸ் வசதிகள்
மற்ற பொருட்கள் வாங்கவோ அல்லது தொழில் தொடங்கவோ வங்கிகளில் அவ்வளவு எளிதில் பைனான்ஸ் கிடைக்காது. ஆனால் வீடு, நிலம் வாங்க அனைத்து வங்கிகளும், வங்கிகள் அல்லாத பைனான்சியல் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு லோன் கொடுத்து வருகின்றன. ரியல் எஸ்டேட்டுக்காக கொடுக்கப்படும் கடன்கள் பெரும்பாலும் வசூலாகி விடுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.
மலிவான வட்டி மற்றும் நடைமுறையில் லோன்
மற்ற கடன்களை ஒப்பிடும்போது வீடு வாங்குவதற்கு இந்தியாவில் மிக எளிதில் லோன் கிடைத்துவிடும். ஒரு கார் அல்லது பைக் வாங்க வேண்டும் என்றால் 14% வட்டி வாங்கும் வங்கிகள் வீடு வாங்க வெறும் 9.25 முதல் 11 சதவீதம் வரை தான் வட்டி வாங்குகின்றன. பெர்சனல் கடன்களுக்கு 15% வட்டி வாங்கி வெட்டியாகச் செலவு செய்வதைவிட வீடுகளுக்குக் குறைந்த சதவீதத்தில் லோன் வாங்கி நமது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளலாம்.
ஒவ்வொருவரின் நிச்சய தேவை
உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும் ஒரு மனிதனுக்கு இன்றியமையாத தேவை. எனவே ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படும் வீட்டை வாங்குவது தான் சால சிறந்தது. நமது பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு வீடுகளையோ அல்லது மனைகளையோ வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு இதில் உள்ளது. மேலும் இதன் மூலம் வருமானம் வரும் வழியும் உண்டு.
வீட்டை லோன் போட்டு வாங்கி அதன் பின்னர் அதை வாடகைக்கு விட்டால் கிட்டத்தட்ட அந்த வாடகையை வைத்தே லோன் கட்டிவிடலாம். ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்குப் பின் நமக்கு அந்த வீடு வருமானத்தைக் கொடுக்கும்., மேலும் குறைந்த விலையில் பழைய வீட்டை வாங்கி ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலவு செய்து மராமத்து செய்தால் அந்த வீடு புதுவீடு போல ஆகிவிடுவதுடன் அதன் மதிப்பும் உயர்ந்துவிடும்.
புரோக்கர்களின் தொல்லையும் செலவும் இல்லை
நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு வணிகத்திற்கும் புரோக்கர்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும். நம்முடைய வருமானத்தில் ஒரு பெரும் பகுதியை புரோக்கிங் ஏஜண்ட் ஆக்கிரமித்துக் கொள்வார்கள் ஆனால் ரியல் எஸ்டேட்டை பொறுத்தவரையில் ஒரே ஒருமுறை கமிஷன் கொடுத்தால் போதும். அதுகூட இப்போது புரோக்கர்கள் இல்லாமலேயே வீடு வாங்கப் பல இணையதளங்கள் உதவுகின்றன. அதுமட்டுமின்றி இணையதளங்களிலும், தினசரிகளிலும் ஏகப்பட்ட ரியல் எஸ்டேட் குறித்த செய்திகள் கொட்டி கிடக்கின்றன.
அபராதம் போன்ற பயம் இல்லை
நீங்கள் கிரெடிட் கார்டோ அல்லது பெர்சனல் லோனோ அல்லது EMI இல் ஒரு பொருள் வாங்கினாலோ கண்டிப்பாக அதில் குறிப்பிட்ட தேதிக்குள் மாதாந்திர தவணையைக் கட்ட வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய அபராத தொகையை கட்டுவதோடு, மன அழுத்தமும் சேர்ந்து உடல்நிலையைப் பாதிக்கும் அபாயம் உண்டு. ஆனால் வீடு வாங்குவதில் இந்தத் தொந்தரவு இல்லை. வீட்டை வாங்கி வாடகைக்கு விட்டால், வாடகையை வாங்கி கடனை கட்டிவிடும் எளிய நடைமுறை உள்ளது. எனவே நமக்கு எந்தவிதமான பிரஷரும் இருப்பதில்லை.
வளர்ச்சி விகிதம்
அதிகம் கார், பைக் உள்பட எந்தவொரு பொருள் வாங்கினாலும் அந்தப் பொருளால் நமக்கு மேலும் அதிகப்படியான செலவுதானே தவிர வருமானம் எதுவுமில்லை. ஆனால் வீட்டில் மட்டும்தான் வருமானம் உள்ளது. அதுமட்டுமின்றி வீட்டின் மதிப்பும் வருடத்திற்கு வருடம் உயர்ந்து கொண்டே போகும். ஒரு வீட்டை வாங்கி வாடகைக்கு விட்டுவிட்டு ஓய்வு பெற்ற பின்னர் அந்த வீட்டைப் பெரிய தொகைக்குப் பெற்றுவிட்டு வேறு ஒரு இடத்தில் ஒரு சிறிய தொகைக்கு மற்றொரு வீட்டை வாங்கிக் கொள்ளலாம்.
வேறு என்ன பலன்கள் இருக்கின்றது
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பெருநகரங்களுக்கு கொஞ்சம் தொலைவில் உள்ள இடமும் நாளடைவில் மதிப்பு உடையதாக மாறிவிடுகிறது. புதிய மருத்துவமனை, பள்ளி, ஷாப்ப்ங் மால், வியாபார நிறுவனங்கள் வந்துவிட்டால் அதன் அருகில் நாம் வாங்கி போட்டிருந்த நிலத்தின் மதிப்பும் பன்மடங்கு உயர்ந்துவிடும் வாய்ப்பு உள்ளது. புறநகரில் வீடு வாங்கினாலும் நாளடைவில் அந்த வீட்டின் மதிப்பு உயர்ந்து ஒருநாள் உச்சத்திற்குச் செல்லும் என்பது உறுதி.
அடுத்த தலைமுறையினர்களுக்கும் உதவும்
நாம் வாங்கும் வீடு நமது வாழ்நாள் முழுவதும் பயன்படுவதோடு நமது குழந்தைகள், பேரன் பேத்திகள் என அடுத்த தலைமுறையினர்களுக்கும் உதவும் ஒரு சொத்தாக வீடு உள்ளது. பங்குச்சந்தையில் நாம் வாங்கும் பங்குகள் நமது தலைமுறையினர்களுக்கு பெரிய அளவில் உதவுவதில்லை. ஆனால் வீடுகள், மனைகள் அப்படியல்ல.
கிடைக்கும் வரிச்சலுகைகள்
வீடு வாங்க லோன் வாங்குபவர்களுக்கு வரிச்சலுகையும் கிடைக்கும். ரூ.1,50,000 வரை மிகப்பெரிய சொத்துக்கள் வாங்கும்போது வரிச்சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த வரிச்சலுகையை லோன் மூலம் வீடு வாங்குபவர்கள் அனுபவிக்கலாம்.
எனவே பங்கு வர்த்தகம் உள்ளிட்ட எந்தத் தொழிலில் முதலீடு செய்வதைவிட ரியல் எஸ்டேட்டில் செய்யும் முதலீடு ஆனது மிகுந்த பாதுகாப்பானது மட்டுமின்றி உபயோகமான முதலீடும் கூட. நமக்கு மட்டுமின்றி நம்முடைய தலைமுறையினர்களுக்கும் உதவும் வகையில் உள்ள இந்த ரியல் எஸ்டேட் முதலீட்டை ஒவ்வொருவரும் பின்பற்றினால் நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு என்ற கனவு முழுமை அடைந்து விடும்.