2016 அக்.23க்கு முன்பு பதிவான நிலங்களை மறு பத்திரப்பதிவு செய்யலாம்- ஹைகோர்ட் உத்தரவு

2016 அக்.23க்கு முன்பு பதிவான நிலங்களை மறு பத்திரப்பதிவு செய்யலாம்- ஹைகோர்ட் உத்தரவு

சென்னை:  பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை உயர்நீதிமன்றம் இன்று தளர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் செய்யப்பட்ட, அங்கீகாரமில்லாத மனைகளை மறுபதிவு செய்யலாம் என்றும் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

விவசாய  நிலங்களை வீட்டுமனைகளாக பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக பத்திரப்பதிவு செய்யத் தடை விதித்தது.

இந்த  தடையை நீக்கக் கோரி ரியல் எஸ்டேட் அதிபர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த  வழக்கு உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று ரியல் எஸ்டேட் சார்பில் வாதிடப்பட்டது.


இதைத்  தொடர்ந்து நீதிபதிகள், தடையால் மக்கள் பாதிக்கப்படுவதை அறிந்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியதோடு, அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படுத்த தமிழக அரசுக்கு வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.


அங்கீகாரம்  இல்லாத நிலங்களை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பத்திரப்பதிவு செய்ய ஒரு வாரத்தில் புதிய விதிகள் வகுக்கப்படும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதனை ஏற்று விளைநிலங்களை வீட்டு மனைகளாக பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்ட உத்தரவில், உயர்நீதிமன்றம் மாற்றம் செய்துள்ளது. அதாவது கடந்த 2016 அக்டோபர் 23ம் தேதிக்கு முன் அதாவது 23.10.2016 தேதிக்கு முன் பத்திரப்பதிவு செய்த மனைகளுக்கு உயர்நீதிமன்றத்தின் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.