அலுவலக குத்தகை அளவு 36% சரிவு.. பெரும் நகரங்களில் பெரும் பிரச்சினை..!
அலுவலக குத்தகை அளவு 36% சரிவு.. பெரும் நகரங்களின் பெரும் பிரச்சினை..!
இந்தியாவின் டாப் 7 பெரு நகரங்களில் அலுவலகங்களின் குத்தகை அளவீடு கடந்த வருடத்தை காட்டிலும் இந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் சுமார் 36 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் வெறும் 55 லட்ச சதுரடி அலுவலகம் மட்டுமே மீண்டும் செயல்பாட்டில் உள்ளது என JLL நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக
இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாகப் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் காரணத்தால் நிறுவனங்களுக்கு அலுவலகம் தேவையில்லாத ஒன்றாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலேயே பணியாற்றி வரும் நிலையில் வர்த்தகத்திலும் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் உள்ளது.
செலவுகள் குறைப்பு
இதனால் நிறுவனங்கள் அலுவலகங்களை அதிகளவில் குறைத்துள்ளது மட்டும் அல்லாமல் மூடப்பட்டும் உள்ளது. மேலும் பெரு நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரையில் நிறுவன செலவுகளைக் குறைக்கவும், ஊழியர்களின் வசதிகளுக்காகவும் 60 முதல் 80 ஊழியர்களைத் தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தி வருகின்றனர்.
அலுவலகங்களுக்கான தேவை
இதன் காரணமாகவே தற்போது பெரு நகரங்களில் அலுவலகங்களுக்கான தேவை பெரிய அளவில் குறைந்துள்ளது. ஆனாலும் அலுவலகத்திற்கான வாடகை அளவில் பெரிய அளவிலான மாற்றம் இல்லாமல் இருக்கும் காரணத்தால் ஆபீஸ் ரியல் எஸ்டேட் துறைக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
மும்பையில் அதிக பாதிப்பு
2020 ஜனவரி - மார்ச் காலாண்டில் 86 லட்ச சதுரடியாக இருந்த அலுவலகப் பரப்பளவு 2021 ஜனவரி - மார்ச் காலாண்டில் 55 லட்ச சதுரடியாகக் குறைந்துள்ளது. இதில் அதிகளவில் பாதிக்கப்பட்டது மும்பை என்றும், அதிக அலுவலகங்கள் இருக்கும் பெங்களூரில் இதன் அளவு 2.7 லட்ச சதுரடியில் இருந்து 2.2 லட்ச சதுரடியாகக் குறைந்துள்ளது.
புதிய அலுவலகம்
இதேவேளையில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட அலுவலகத் தளங்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் சுமார் 56 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் சந்தையில் இதற்கான தேவை என்பது மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் ஆபீஸ் ரியல் எஸ்டேட் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.