இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் 3D பிரிண்டிங் வீடு கட்டி சாதனை.. மாஸ் காட்டும் எல்&டி..!

இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் 3D பிரிண்டிங் வீடு கட்டி சாதனை.. மாஸ் காட்டும் எல்&டி..!

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகளில்  கட்டுமானத் துறையில் பல தொழில்நுட்ப உதவிகளுடன் வீட்டைக் குறைந்த காலகட்டத்தில் கட்டுவதற்கு 3D பிரிண்டிங் முறையைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்து  வரும் நிலையில், எல்&டி நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக அதுவும் நம்ம தமிழ்நாட்டில் 3D பிரிண்டிங் முறையைப் பயன்படுத்தி வெற்றிகரமாக வீட்டை கட்டி முடித்துள்ளது.

L&T  கட்டுமான நிறுவனம் 

21 பில்லியன் டாலர் மதிப்புடைய எல்&டி கட்டுமான நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் 3D பிரிண்டிங் முறையில் சிமெண்ட் கலவையைக் கொண்டு உறுதியான வீட்டைக் கட்டி முடித்துள்ளது. 

இதுவும் G+1 அதாவது தரைதளத்திற்கும் மேல் ஒரு அடுக்கு கொண்ட வீட்டைத் தமிழ்நாட்டில் கட்டி ரியல் எஸ்டேட் துறையில் புதிய புரட்சியைச் செய்துள்ளது.

3D பிரிண்டிங் முறை

மத்திய அரசு 2022ஆம் ஆண்டுக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் வீடு எனத் திட்டத்தின் கீழ் 60 கோடி வீடுகளைக் கட்டும் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் நிலைமையில், எல்&டி நிறுவனத்தின் இந்த 3D பிரிண்டிங் முறையிலான கட்டுமானம் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல் எஸ்டேட் கட்டுமான துறை 

3D பிரிண்டிங் மூலம் கட்டுப்படும் வீடுகளை விரைவாகக் கட்டப்படுவது மட்டுமல்லாமல் அதன் தரத்தையும் பெரிய அளவில் மேம்படுத்த முடியும். இந்தத் தொழில்நுட்பம் மூலம் ரியல் எஸ்டேட் கட்டுமான துறையில் புதிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்ப்பதாக எல்&டி நிறுவனத்தின் தலைவர் மற்றும் உயர் நிர்வாகத் தலைவர் எம்வி சதீஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு 

தமிழ்நாட்டில் எல்&டி நிறுவனத்தின் காஞ்சிபுரம் தொழிற்சாலையில் சுமார் 700 சதுரடியில், நிறுவனத்தால் ஆராய்ச்சி செய்யப்பட்டுப் புதுமையான முறையில் சந்தையில் கிடைக்கும் பொருட்களை வைத்துச் சரியான திட்டமிடல் உடன் உருவாக்கப்பட்ட சிறப்புக் கான்கிரீட் கலவையைக் கொண்டு இந்த வீட்டு கட்டப்பட்டு உள்ளது.. இல்லை பிரிண்ட் செய்யப்பட்டு உள்ளது.

106 மணிநேரம் 

மேலும் இந்தியக் கட்டுமான சட்டதிட்டங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் தரைதளம் முதல் மொட்டை மாடி வரையில் அனைத்து பகுதிகளையும், முறையான சப்போர்ட் கொண்டு தரைதளம் மற்றும் முதல் மாடி கொண்ட 700 சதுரடி அளவிலான வீட்டை 106 மணிநேரத்தில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.