டாடாவின் மிகப்பெரிய முடிவு.. ரியல் எஸ்டேட் துறையில் 4000 கோடி முதலீடு..!
டாடாவின் மிகப்பெரிய முடிவு.. ரியல் எஸ்டேட் துறையில் 4000 கோடி ரூபாய் முதலீடு..!
இந்தியாவிலேயே மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா குழுமம் ஐடி, ஆட்டோமொபைல், உற்பத்தி எனப் பல துறைகளில் இருப்பது போல் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையிலும் உள்ளது. இப்பிரிவுக்காக இயங்கும் நிறுவனம் தான் டாடா ரியாலிடி.
கொரோனா தொற்றுக்குப் பின்பு நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்தையும் மேம்படுத்த இந்திய அரசு அதிகம் நம்பும் ஓரே திட்டம் கட்டுமான துறை தான். இத்துறையில் மத்திய அரசும் அதிகளவிலான முதலீட்டைச் செய்யத் திட்டமிட்டு உள்ள நிலையில், தனியார் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களும் அதிகளவில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
இதன் வாயிலாக டாடா ரியாலிடி நிறுவனமும் மிக முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
டாடா ரியாலிடி
டாடா ரியாலிடி அண்ட் இன்பரா நிறுவனம் அடுத்த 2 வருடத்தில் வீடுகள் மற்றும் வர்த்தகத் திட்டங்களில் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் தடை பெற்று நிற்கும் மும்பை முலண்டு திட்டத்தைத் திரும்பவும் துவங்கவும் முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றின் முதல் அலைக்குப் பின்பு இந்திய ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய வர்த்தகத்தைப் பெற்றது. இதில் டாடா ரியாலிடி நிறுவனமும் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றுள்ள காரணத்தாலும், சந்தையில் டிமாண்ட் அதிகரித்துள்ள காரணத்தாலும் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரெடி டு மூவ் பிரிவு வீடுகள்
டாடா ரியாலிடி அண்ட் இன்பரா நிறுவனம் வீடுகள், வர்த்தகக் கட்டிடங்கள், ரீடைல் கட்டிடங்கள் பிரிவில் இயங்கி வருகிறது. தற்போது சந்தையில் ரெடி டு மூவ் பிரிவு வீடுகளுக்கு அதிகளவிலான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் புதிதாக முதலீடு செய்து கட்டுமான திட்டத்தை அதிகரிக்கவும், அதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகத்தைப் பெற முடிவு செய்துள்ளது.
5000 ஊழியர்கள்
இதைச் செயல்படுத்த கொரோனா காலத்தில் மட்டும் சுமார் 1,500 ஊழியர்களைப் புதிதாகத் தனது நிறுவனத்தில் சேர்ந்துள்ளது, இதன் மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 5000 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு முன்பு இந்நிறுவனத்தில் மொத்த வேலையாட்கள் எண்ணிக்கை 3,500 ஆகவும், 670 ஊழியர்களையும் கொண்டு இருந்தது.
1,500 கோடி ரூபாய் வருவாய்
2020-21ஆம் நிதியாண்டில் மட்டும் டாடா ரியாலிடி அண்ட் இன்பரா நிறுவனம் சுமார் 1,500 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்று உள்ளது. இது டாடா இலக்கு நிர்ணயம் செய்த இலக்கை விடவும் இது சுமார் 120 சதவீதம் அதிகமாகும். 2019-20 நிதியாண்டை விடவும் 15 சதவீதம் கூடுதலான வருமானத்தைப் பெற்றுள்ளது. மேலும் இந்த நிதியாண்டில் சுமார் 1,300 வீடுகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது டாடா ரியாலிடி.
மலிவு விலை வீடுகளுக்கு டிமாண்ட்
டாடா ரியாலிடி நிறுவனம் 2020-21ஆம் நிதியாண்டில் சுமார் 70 சதவீத வர்த்தகத்தை மலிவு விலை வீடுகள் மற்றும் ப்ரீமியம் யூனிட்-கள் வாயிலாகவே பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 30 சதவீத வர்த்தகத்தை ஆடம்பர பிரிவில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
17 கட்டுமான திட்டங்கள்
தற்போது இந்நிறுவனம் சுமார் 17 வீட்டு மனை மற்றும் வர்த்தகத் திட்டங்களைக் கட்டி வருகிறது. இதில் சுமார் 3000 வீடுகள் உள்ளது. கொரோனா காலகட்டத்திலும் சுமார் 4 திட்டங்களை வெற்றிகரமாக முடித்து வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது டாடா ரியாலிடி துறை.
சொந்த வீடு
சொந்த வீடு வாங்க வேண்டும் என்பவர்களுக்கு இது மிகவும் சிறப்பான காலம், ஒரு பக்கம் வங்கிகளில் வீட்டுக்கடனுக்கு மிகவும் குறைவான வட்டி, மறுபக்கம் சந்தையின் டிமாண்ட்-க்கு ஏற்ப அதிகளவிலான கட்டுமான திட்டங்கள் இருக்கும் காரணத்தால் குறைவான விலைக்கே வீடுகளை வாங்க முடியும்.
பெரு நகரங்களில் வீடு
குறிப்பாகப் பெரு நகரங்களில் வீடு வாங்க வேண்டும் எனத் திட்டமிடுவோருக்கு இதை விட்டால் சிறந்த காலம் வராது. இதேபோல் வங்கியில் அடுத்த சில காலாண்டுகளுக்கு வட்டியை உயர்த்த வாய்ப்பு இல்லை என்பதால் திட்டமிட்டு வீட்டை வாங்குவதற்குப் போதுமான காலம் உள்ளது.