வீட்டுக் கடனில் 7 வகை உள்ளது.. உங்களுக்கான கடன் திட்டம் எது..?
வீட்டுக் கடனில் 7 வகை உள்ளது.. உங்களுக்கான கடன் திட்டம் எது..?
தனக்கென ஒரு வீடு. இது ஒவ்வொரு மனிதனின் முதல் கனவாக இருக்கின்றது. கனவு கண்டால் மட்டும் போதுமா? அதை நனவாக்கும் வழிமுறைகளை அறிந்து அவற்றின் வழியே பயணிக்க தொடங்கினால் மட்டுமே நினைத்ததை அடைய முடியும்.
நடுத்தர இந்தியர்களுக்கு ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளும் ஒரு எளிய வழி வீட்டுக் கடன். இந்தியாவில் உள்ள தேசிய அல்லது தனியார் வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் பல்வேறு வகையான வீட்டுக் கடன்களை வழங்குகின்றன.
உங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு, எது உங்களுக்கு மிகவும் உகந்தது என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு வகையிலான வீட்டுக் கடன்களைப் பற்றிய புரிதல் மிகவும் அவசியமாகும். தற்போதைய நிலையில் இந்தியாவில் மட்டும் சுமார் 7 வகையான வீட்டுக் கடன்கள் உள்ளது.
1. நிலம் வாங்குவதற்கான கடன்
ஒரு நிலத்தை தேர்ந்தெடுத்து அதன் பிறகு உங்களுக்கு தேவையான வீட்டை கட்டத் திட்டமிடுகின்றீர்களா? இதற்கு உதவ இந்தியாவில் உள்ள வங்கிகளாலும் அல்லது பிற வங்கி சாராத நிதி நிறுவனங்களாலும் (NBFCs) வீட்டு மனை வாங்க கடன் வழங்கப்படுகின்றது. பொதுவாக வங்கிகள் மனையின் மதிப்பில் சுமார் 80 முதல் 85% வரை கடன் வழங்குகின்றன.
2. வீடு வாங்க கடன்
மனை வாங்கி வீடு கட்டுவதற்கு பதில், புதிதாக ஒரு கட்டிய வீட்டை வாங்குவதற்கு இந்தக் கடன் வழங்கப்படுகின்றது. நிதி நிறுவனங்கள் வழக்கமாக ஒரு வீட்டின் சந்தை மதிப்பீட்டில் சுமார் 80 முதல் 85% வரை இதற்காக கடன் வழங்குகின்றன. இந்த கடன்களின் மீதான வட்டி விகிதம் மூன்று வகையாக நிர்ணயிக்கப்படுகின்றது. அதாவது நீங்கள் நிலையானது, மாறக்கூடியது அல்லது இவை இரண்டும் கலந்த கலவை ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.
3. வீடு கட்டுமான கடன்
உங்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்லது நீங்கள் பாகஸ்தராக உள்ள மனையில் வீடு கட்ட இந்தியாவில் உள்ள நிதி நிறுவனங்கள் இந்தக் கடன் வழங்கப்படுகின்றது. இந்தக் கடன் நடைமுறையில் வீட்டுக் கடன், கடனுக்கான விண்ணப்பம் மற்றும் ஒப்புதல் செயல்முறை போன்றவை பொதுவாக சந்தையில் நிலவும் பிற வீட்டுக் கடன் நடைமுறைகளை விட சில அம்சங்களில் வேறுபட்டது.
அதாவது:
* வீட்டு மனை ஒரு வருட காலத்திற்குள் வாங்கப்பட்டிருக்க வேண்டும்
* வீட்டை நிர்மாணிப்பதற்காக உத்தேச செலவின மதிப்பீட்டை கடன் பெற விண்ணப்பிப்பவர் தெரிவிக்க வேண்டும்.
* மனையின் மதிப்பு கடனில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. வீட்டை நிர்மாணிப்பதற்கு தேவைப்படும் நிதி மட்டுமே கடனுக்காக எடுத்துக் கொள்ளப்படும்.
4. வீட்டை நீட்டிப்பதற்கான கடன்கள்
ஒருவர் தான் வசிக்கும் சொந்த வீட்டை விரிவாக்க அல்லது புணரமைக்க விரும்பினால், இந்தக் கடனை பெற்றுக் கொள்ளலாம். சில வங்கிகள் தற்போதைய வீட்டின் விரிவாக்கத்தின் அடிப்படையில் இந்த கடனை வேறுபடுத்துகின்றன. பெரும்பாலான வங்கிகளில் இந்த வகை கடன்கள், வீட்டு மேம்பாட்டு கடன்களின் ஒரு பகுதியாக உள்ளன.
5. வீட்டை மேம்படுத்த கடன்
ஒருவருக்கு சொந்தமான வீடு இருந்து அவர் அதை மேம்படுத்த விரும்பினால், இந்தக் கடனை பெற்றுக் கொள்ளலாம். தற்போதுள்ள வீடுகளை பழுது பார்ப்பது, சுவர்களுக்கு வண்ணம் தீட்டுவது, ஆழ்துணை கிணறு தோண்டுவது, நீர்-காப்பு, மின் வயரிங் போன்றவை புணரமைப்பில் அடங்கும்.
6. என்.ஆர்.ஐ.-வீட்டுக் கடன்கள்
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் குடியிருப்பு வசதிகளை வாங்குவதில் ஆர்வமுடன் இருந்தால் அவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த வகை கடன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டு கடன் கட்டமைப்பு வழக்கமான வீட்டு கடன்களைப் போலவே இருந்தாலும், இதனுடைய காகிதப்பணி சற்று கூடுதலானது.
7. வீட்டை மாற்றுவதற்கு கடன்
ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கியவர்கள் மற்றொரு புதிய வீட்டை வாங்க விரும்பும் பொழுது இந்தக் கடனை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் தற்பொழுது உள்ள வீட்டிலிருந்து புதிய வீட்டிற்கு மாறிக் கொள்ளலாம்.