பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி?
பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி?
ஒருவர் தமது சொத்தை விற்றாலோ அல்லது வேறு ஒருவரிடமிருந்து வாங்கினாலோ அல்லது வேறு ஒரு பெயருக்கு மாற்றினாலோ அதை ஆவணப்படுத்த வேண்டியது அவசியம்.
இரண்டு தனி நபர்களுக்கிடையே நடக்கும் விற்பனை நடவடிக்கையை பத்திரப்பதிவு செய்வது முதல் நடவடிக்கை எனில், அதனை அரசு அங்கீகரித்து அளிப்பதே பட்டா பெயர் மாற்றம்.
பட்டா உள்ள நிலம், கட்டிடம், காலி மனை,
விவசாய நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் வாங்கப்படும்போது, அவற்றை விலை
கொடுத்தோ சொத்து வாரிசு உரிமைப்படியோ, பாகப்பிரிவினை பத்திரப்படியோ,
உயில் ஆவணத்தின்படியோ வாங்குபவர் பட்டாவின் பெயர் மாற்றத்திற்கு
விண்ணப்பிப்பது எப்படி? யாரை அணுகுவது?
பட்டாவில் என்னென்ன விவரங்கள் இருக்கும்?
பட்டா என்பது ஒரு நிலத்தின் உரிமை யாரிடம் இருக்கிறது என்பதைக் காட்டுவதாகும். இதில் உரிமையாளர் பெயர், பட்டா எண், ஊரின் பெயர், மாவட்டத்தின் பெயர், புல எண் (survey number), உட்பிரிவு (sub division), நிலத்தின் பரப்பு, தீர்வை, நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா போன்ற விவரங்களை உள்ளடக்கியிருக்கும்.
எங்கே விண்ணப்பிப்பது?
சொத்தின் எல்லைக்குட்பட்ட வட்டாட்சியரிடமோ அல்லது கிராம நிர்வாக அலுவலரிடமோ விண்ணப்பிக்கலாம். நேரில் விண்ணப்பத்தைக் கொடுத்தால் ஒப்புகைச் சீட்டு வாங்கி வைத்துக் கொள்வது அவசியம். அப்படி ஒப்புகைச் சீட்டு தராத பட்சத்தில் விண்ணப்பத்தை அஞ்சல் ஒப்புகையுடன் பதிவுத் தபாலில் அனுப்பிவிட வேண்டும்.
கட்டணம் எவ்வளவு?
பட்டா மாற்றத்திற்கு அதன் உட்பிரிவினைப் பொறுத்து 80 ரூபாயிலிருந்து 240 ரூபாய் வரைக்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
எப்படி விண்ணப்பிப்பது?
பத்திரப்பதிவு செய்து, 15 நாட்களில் பட்டா மாறுதலுக்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு, ‘நான் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒளிநகல் பத்திரத்தில் உள்ள நிலத்தைக் கிரயம் பெற்றேன். நான் கிரயம் பெற்ற நிலத்தை என் பெயரில் பட்டா மாற்றம் செய்திட/ உட்பிரிவு செய்து தனிப்பட்டா அளித்திட வேண்டுகிறேன்’ என்று விண்ணப்பத்தைப் பதிவஞ்சலில் ஒப்புதல் அட்டையுடன் அனுப்பிவிட வேண்டும். இத்துடன் பத்திர ஆவணங்களின் நகலை இணைக்க வேண்டும்.
எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?
சாதாரண பட்டா மாற்றத்திற்கு 15 நாட்களிலும், உட்பிரிவு செய்யவேண்டிய பட்டா மாற்றத்திற்கு 30 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும்.
பட்டாவின் அவசியம்
ஒருவரிடமிருந்து மற்றொருவர் நிலமோ, கட்டிடமோ விலை கொடுத்து வாங்கும்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யப்படும். பத்திரப்பதிவுக்குப் பின் வாங்கியவர், தமது பெயருக்கு பட்டா மாறுதல் செய்துகொள்ள வேண்டும்.
ஏனெனில் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் நில ஆவணங்கள் இருப்பதால் பத்திரப்பதிவு நகலை வைத்து உரிய கட்டணம் செலுத்தி, தன் பெயருக்கு மாற்றித் தர விண்ணப்பிக்க வேண்டும்.
வட்டாட்சியரிடமிருந்து சம்பந்தப்பட்ட நில அளவையாளருக்கு விண்ணப்பம் அனுப்பப்படும். விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட அவர், நிலத்தை நேரில் சென்று அளந்து, ஆவணங்களில் தேவையான மாறுதலைச் செய்து, பட்டா மாற்றம் செய்து வழங்குவார்.
வங்கிகளில் விவசாயக் கடன் பெற, நகைக் கடன் பெற, பத்திரப்பதிவு செய்ய, அரசின் நலத்திட்டங்களைப் பெற, இயற்கைச் சீற்றங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்போது வெள்ள அல்லது வறட்சி நிவாரணம் பெற… இப்படிப் பல அரசு சார்ந்த செயல்பாடுகளுக்கு பட்டா அவசியமாகிறது.
ஆவணங்களின் நகல்களைப் பெற…
பட்டா மாற்றத்திற்குப்பின் அடங்கல், சிட்டா, அ பதிவேடு, நிலவரைபடம் ஆகிய ஆவணங்களின் நகல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எப்படி விண்ணப்பித்துப்பெறுவது?
‘எனக்கு சாதாரண பட்டா மாற்றம் —- தாலுகா —- கிராம —— புல எண்ணில் அளிக்கப்பட்டது. இது குறித்துப் பதிவுகள் செய்யப்பட்ட சிட்டா, அடங்கல் நகல் அளிக்க வேண்டுகிறேன்.’
‘எனக்கு உட்பிரிவு தனிப்பட்டா —- தாலுகா —- கிராம —— புல எண்ணில் அளிக்கப்பட்டது. இது குறித்துப் பதிவுகள் செய்யப்பட்ட சிட்டா, அடங்கல், அ பதிவேடு, நிலவரைபடம் ஆகியவற்றின் ஒளிநகலை அளிக்க வேண்டுகிறேன்.’
குறிப்பிட்ட 15/30 நாட்களுக்குள் பட்டா மாற்ற ஆணைகள் வராவிடில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்