பெங்களூர் நகரத்தை விட்டு வெளியேறும் ஐடி ஊழியர்கள்.. என்ன நடக்கிறது..?

பெங்களூர் நகரத்தை விட்டு வெளியேறும்  ஐடி ஊழியர்கள்.. என்ன நடக்கிறது..?

கொரோனாவின்  தாக்கம் மக்களையும் நாட்டையும் மிகப்பெரிய அளவில் மாற்றியுள்ளது,  அதிலும் குறிப்பாகப் பெரு நகரங்களில் மிகப்பெரிய மாற்றங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். வீதிக்கு ஒரு ஐடி நிறுவனங்கள் நிறைந்திருக்கும் பெங்களூரில் கொரோனா-க்குப் பின் மக்கள் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். இந்த முடிவுகள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களைத் தலைகீழாகப் புரட்டிப் போடக் காத்துக் கொண்டு இருக்கிறது.

பெங்களூரில்  இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் கொரோனா வந்த பின்பு ஊழியர்கள் Work From Home செய்து வருகின்றனர். இதிலும் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் கொரோனாவுக்குப் பின்பு செலவுகளைக் குறைப்பதற்காக 50 முதல் 75 சதவீத ஊழியர்களை நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையில் திட்டமிட்டு வருகிறது

இதன்  எதிரொலியாக வாடகை வீட்டில் இருப்பவர்களும், சொந்த வீடு வாங்கத் திட்டமிடுபவர்களுக்கும் பெங்களூரின் சிட்டி பகுதியில் வாங்காமல் சிட்டிக்கு வெளியில் வாங்க முடிவு செய்துள்ளனர்.

மக்களின் மன மாற்றம் 

பெங்களூரில்  இருக்கும் பெரும்பாலான ஊழியர்கள் ஐடி அல்லது அதைச் சார்ந்த ஏதேனும் டிஜிட்டல் வர்த்தகத்தில் தான் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா காரணமாக இன்று ஊழியர்கள் வீட்டில் முடங்கினாலும் 80 சதவீதம் முழுமையாக இயங்கி வருகிறது. காரணம் அனைவரும் வீட்டில் இருந்தே பணியாற்றுகின்றனர். இந்நிலையில்  கொரோனா முடிந்த பின்பும் ஐடி நிறுவனங்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்த பணியாற்றும் சலுகையைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் மக்கள் செலவுகளைக் குறைக்கப் பல்வேறு மாற்று வழிகளைத் தேடி வருகின்றனர்.

முக்கியச் செலவுகள் 

பெங்களூரு  போன்ற பெரிய நகரங்களில் வாழும் மக்களுக்கு மிகப்பெரிய சுமையே வீட்டு வாடகை தான், அதிலும் குறிப்பாக மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் வீட்டு வாடகை 20000 முதல் 30000 வரை இருக்கிறது. இந்நிலையில் கொரோனா காலத்தில் சம்பளமும் குறைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் முக்கியப் பகுதிகள் அல்லாத சிட்டி பகுதிக்கு வெளியில் வாடகைக்குக் குடி போகத் துவங்கியுள்ளனர்

புதிய வீடு 

மேலும்  புதிய வீடு வாங்க திட்டமிடுபவர்களும் தற்போது சிட்டிக்கு வெளியில் வீடுகளை வாங்கவே அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வெளிப் பகுதியில் வீடுகளை வாங்கும் போது விலையும் குறைவு சிட்டி விரிவாக்கம் அடையும்போது அதிக லாபமும் கிடைக்கும் எனத் திட்டமிடுகின்றனர் பெங்களூரு மக்கள்.

ரியல் எஸ்டேட்

இதன்  எதிரொலியாகச் சிட்டி பகுதியில் வீடுகளின் விற்பனை முற்றிலும் முடங்கியது மட்டும் அல்லாமல் வீடுகளின் மதிப்பும் அதிகளவில் குறைந்துவிடும் அபாயமும் நிலவுகிறது.

சொந்த ஊர்

அவை  அனைத்தையும் தாண்டி, ஊழியர்களுக்கான Work From Home வசதி கொரோனா-க்கு பின்பும் நிலவும் என்ற காரணத்தால் தற்போது பெங்களூரில் வசிக்கும் மக்கள் அதிகமானோர் செலவைக் குறைக்க வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்குச் செல்லும் நிகழ்வு அரங்கேறி வருகிறது.


அதிகம் பாதிப்பு

இந்த மாற்றத்தால்  மக்கள் அதிகம் வெளியேறும் பகுதிகளாக மகாதேவபுரா, வெயிட்பீல்டு, எலக்ட்ரானிக் சிட்டி, பெலந்தூர், சர்ஜாபுரா ஆகிய பகுதிகள் கூறப்படுகிறது.

இதற்கு ஏற்றார் போல் பெங்களூரில் தற்போது மெட்ரோ சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதால் மக்களுக்குப் போக்குவரத்துப் பிரச்சினை இருக்காது.


இலக்கு

இந்நிலையில்  அடுத்த கட்ட ரியல் எஸ்டேட் மற்றும் வர்த்தக வளர்ச்சி அனைத்தும் இனி 2ஆம் தர பகுதிகளில் தான் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Challaghatta, Gottigere மற்றும் Bommasandra ஆகிய பகுதிகள் முக்கிய வளர்ச்சி பகுதிகளாகக் கருதப்படுகிறது.