ஊருக்குள்ள இனி மீண்டும் பல ரியல் எஸ்டேட் அதிபர்களை பார்க்கலாம்.. பூஸ்ட் கொடுத்த பட்ஜெட்
சில ஆண்டுகள் முன்புவரை நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் என்ற அறிமுகத்தோடும், புரோக்கர்கள் என்ற அடைமொழியோடும் நிறைய பேரை பார்க்க முடிந்தது. ஆனால், பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் ரியல் எஸ்டேட் அதிபர்களை பார்க்க முடியாத சூழல் எழுந்தது. இந்த நிலையில் தான் தற்போதைய அரசின் இறுதி காலம் பட்ஜெட் உரையின் போது ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் தரும் சில முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வீட்டு வாடகை
வீட்டு வாடகை மூலமாக வருமானத்திற்கான வரிச்சலுகை தொகை 1.8 லட்சத்திலிருந்து 2.4 லட்சம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வீடுகள் மூலமாக கிடைக்கும் வாடகை வருமானத்திற்கு இரண்டு வருடங்களுக்கு வரிவிலக்கு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது வீடு
இதுவரை ஒரு வீட்டின் மீதான மூலதன ஆதாய வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் இரண்டு வீடுகளுக்கு மூலதன ஆதாய வரி விலக்கு வழங்கப்படும். அதேநேரம் மூலதன ஆதாயம் 2 கோடிக்குள் இருக்க வேண்டும். இரண்டாவதாக வாங்கப்பட்ட வீட்டிலும் வீட்டின் உரிமையாளரே தங்கியிருந்தால் அதற்காக கணக்கிடப்படும் வாடகை வருமானத்திற்கு வரி விதிக்கப்படாது.
வீடுகள் விற்பனை
இதுகுறித்து ரியல் எஸ்டேட் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறும்போது நாட்டிலுள்ள ஏழெட்டு பெரிய நகரங்களில் 6 முதல் 7 லட்சம் வரையிலான வீடுகள் விற்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. பட்ஜெட் அறிவிப்பின் மூலமாக இவற்றிற்கு விடிவு காலம் பிறக்க கூடும் என்று தெரிவிக்கிறார்கள்.