வீடு வாங்குவது இனி ரொம்ப “ஈசி”- ராஜ்யசபாவில் ரியல் எஸ்டேட் மசோதா நிறைவேற்றம்
வீடு வாங்குவது இனி ரொம்ப “ஈசி”- ராஜ்யசபாவில் ரியல் எஸ்டேட் மசோதா நிறைவேற்றம்
டெல்லி: ராஜ்யசபாவில் ரியல் எஸ்டேட் மசோதா நிறைவேற்றியுள்ளதனை அடுத்து இந்த மசோதா வீடு வாங்க இருப்பவர்களுக்கு பல்வேறு வகையிலும் சாதகமாக அமைந்துள்ளது.
ரியல் எஸ்டேட் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கும் மசோதா கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அறிமுகமானது. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மசோதாவில் சில மாற்றங்களைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
குறிப்பாக இரண்டு மாற்றங்கள் இதில் முக்கியமானவை. வீடு வாங்குபவர்கள் முன் பணமாக 70 சதவீதப் பணத்தைத் தர வேண்டும் என்று முன்பு இருந்தது. அதை 50 சதவீதமாகக் குறைப்பது இந்த மாற்றங்களில் ஒன்று. இதேபோல வீடுகள் கட்டும் நிறுவனங்களை மட்டும் கட்டுப்படுத்தும் வகையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது வர்த்தகக் கட்டுமான நிறுவனங்களையும் இந்த வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
இதன் மூலம் நிறுவனங்கள் கட்டுமானத்துக்கு தனி வங்கி கணக்கு துவங்கி அதன்மூலமாகவே கட்டுமான பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள வேண்டும். இதனால் இத்துறையில் கருப்பு பண புழக்கம் தடுக்கப்படுவதோடு, செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கும்.
இந்தத் துறையில் விதிமீறலில் ஈடுபடும் புரோமோட்டருக்கு 3 ஆண்டு வரையும், முகவர்கள் மற்றும் வீடு வாங்குவோருக்கு ஓராண்டு வரையும் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.