ரியல்எஸ்டேட்டில் முதலீடு செய்யும் என்ஆர்ஐ கவனிக்கவேண்டியவை!

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் என்ஆர்ஐ-கள் கவனிக்க வேண்டியவை!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை இந்தியாவில் முதலீடு செய்யும் வழிகளை ஆராய்வதில் புகழ் பெற்றவர்கள்.  சிலர் சொத்துக்களைப் பல்வேறு வகையில் பிரித்து முதலீடு செய்ய விரும்புவர் , மற்றவர்கள் பணி ஓய்விற்குப் பிறகு தாய்நாட்டில் வசிக்க வீடு போன்ற சொத்துக்களில் முதலீடு செய்வர்.

இந்தியாவிற்கு  வரும் வெளிநாட்டு மூலதனத்தை அதிகரிக்கும் வகையில், இந்தியாவில் வசிக்காதவர்களால் செய்யப்படும் முதலீடுகளுக்கான சில ஒழுங்குமுறை விதிகளை எளிமையாக்கி உள்ளது ரிசர்வ் வங்கி. வெளிநாட்டுப் பரிமாற்ற மேலாண்மை சட்டம் (Foreign Exchange Management Act -FEMA) வெளிநாடுவாழ் இந்தியர்களின் ரியஸ் எஸ்டேட்  பரிவர்த்தனைகளை நிர்வகிக்கிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் முன்பு கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விதிகள் இதோ.

சொத்தின் வகை 

வெளிநாடு வாழ் இந்தியர்கள் வர்த்தக அல்லது குடியிருப்புச் சொத்துக்களில் மட்டுமே முதலீடு செய்ய முடியும். மரபுவழியாகவோ அல்லது பரிசாகவோ  கிடைக்காத விவசாயச் சொத்துக்களை (பண்ணைவீடு மற்றும் தோட்டம் உள்பட) பதிவு செய்ய முடியாது. கூடுதலாக, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான்,சீனா, ஈரான், நேபால் அல்லது பூட்டான் நாடுகளின் குடிமக்கள், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியின்றி இந்தியாவில் எந்தவொரு அசையா சொத்துக்களையும் வாங்க முடியாது. ஆனாலும் அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குச் சொத்தை குத்தகைக்கு எடுக்க முடியும்.

பணபரிவர்த்தனைகள்

சொத்துக்களை  வாங்கும் போது நடக்கும் பரிவர்த்தனைகளில், இந்தியாவிற்கு வரும் பணம் எப்போதும் போல வங்கிகள் வாயிலாகவே நடக்க வேண்டும். இந்தியாவிற்கு வெளியே பணப் பரிவர்த்தனை செய்யக்கூடாது.

பணபரிவர்த்தனைகள்

வெளிநாடு வாழ் இந்தியர்களால் பராமரிக்கப்படும் என்.ஆர்.இ அல்லது என்.ஆர்.ஓ அல்லது எப்.சி.என்.ஆர்(பி) கணக்குகளால் செய்ய முடியும்.இந்த பரிவர்த்தனைகளைப் பயணியர் காசோலை அல்லது வெளிநாட்டு பணத்தால் (traveller's cheque or foreign currency notes) செய்ய முடியாது.

வரிகள்

இந்தியாவில்  உள்ள சொத்துக்கள் மூலம் ஈட்டும் வருவாய்க்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் வரிசெலுத்த வேண்டும். இந்த வருவாய் அந்தச் சொத்துகளை விற்பதன் மூலம் அல்லது அதன் மூலம் கிடைக்கும் வாடகையாக இருக்கலாம். இந்த வருமானம் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீண்ட கால மூலதன வருவாய்

2 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்த சொத்துகளை விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாய் இவ்வகையாகக் கருதப்பட்டு, 20% வரி விதிக்கப்படும்.  மரபுவழி சொத்தாக இருந்தால், உண்மையில் வாங்கிய தேதியில் இருந்து கால அளவு கணக்கிடப்படும் மற்றும் முந்தைய உரிமையாளரிடம் வாங்கிய மதிப்பு சொத்தின் மதிப்பாகக் கணக்கில் கொள்ளப்படும். அதேநேரம் வருமானவரி சட்டத்தின் 54,54எப் மற்றும் 54ஈ.சி பிரிவுகளின் படி, வெளிநாடுவாழ் இந்தியர்கள் வரிவிலக்குக் கோரலாம்.

வாடகை வருவாய் 

வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெறும் வாடகை வருவாய் மற்றும் அதற்கான வரிக் கணக்கீடுகள், இந்தியாவில் வசிப்பவர்களுக்குச் செய்யும் அதே வழிமுறை தான்.

வீட்டுக்கடனுக்கான தகுதிகள்

இந்தியாவில் வசிப்பவர்களைப் போலவே வெளிநாடுவாழ் இந்தியர்களும் இந்திய ரூபாயில் சொத்து மதிப்பில் 80%க்கு வீட்டுக்கடன் விண்ணப்பிக்கலாம். இந்தக் கடனை வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களின் என்.ஆர்.இ அல்லது என்.ஆர்.ஓ அல்லது எப்.சி.என்.ஆர்(பி) கணக்குகள் மூலம் திரும்பச் செலுத்தலாம். 

மேலும்  இந்தியாவில் வசிக்கும் நெருங்கிய உறவினரின் வங்கிகணக்கில் இருந்தும் கடனை திரும்பச் செலுத்த முடியும்(1956ஆம் ஆண்டின் கம்பெனிகள் சட்டம் பிரிவு 6ன் படி).

கட்டுமான நிலையில் உள்ள சொத்து 

உங்களுக்கு  நெருக்கமான நம்பகமான ஒருவருக்கு அதிகாரம் அளித்து (power of attorney to a trusted associate) கட்டுமான நிலையில் உள்ள சொத்துக்களில் முதலீடு செய்யலாம். கட்டுமான நிலையில் உள்ள சொத்தில் பாதுகாப்பாக முதலீடு செய்யும் வகையில் வழக்கறிஞர் உதவியுடன் ஆவணங்களைத் தயார் செய்வதன் மூலம் மோசடி புகாரில் சிக்காமல் தப்பலாம்.