இனி வீடு கட்ட வேண்டும் என்றால் அரசு பதிவு பெற்ற என்ஜினியரின் சர்டிபிகேட் அவசியம்!
இனி வீடு கட்ட வேண்டும் என்றால் அரசு பதிவு பெற்ற என்ஜினியரின் சர்ட்டிபிகேட் அவசியம்!
சென்னை: தமிழகத்தில் இனி வீடு கட்ட வேண்டும் என்றால் அரசு பதிவு பெற்ற பொறியாளர்களின் சான்றிதழ் இருந்தால் மட்டுமே வீடு கட்ட முடியும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அனுமதி பெறப்பட்டு கட்டப்பட்ட சில கட்டடங்கள் இடிந்து விழுந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன..
குறிப்பாக சென்னை முகலிவாக்கத்தில் 11 மாடி அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் பலர் உயிரிழந்தனர். அந்த கட்டிடத்தை விலைக்கு வாங்கிய பலரும் செய்வதறியாது திகைத்தனர். இதன் பின்னர் அரசு இது குறித்த நடவடிக்கையில் இறங்கியது.
கட்டிடங்கள் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட அரசு இதற்கென கூடுதல் விதிமுறைகளை விதிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக கட்டுமான நிபுணர்கள், சங்கங்கள், அமைப்புகள் போன்ற பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை கேட்ட அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய உத்தரவை பிறப்பித்தது.
அதன்படி இனிமேல் தமிழகத்தில் கட்டப்படும் கட்டடங்கள் தமிழக அரசின் பதிவு பெற்ற பொறியாளரின் சான்று பெற்ற பிறகே கட்ட முடியும்.
வீட்டிற்கான திட்டம், வடிவமைப்பு, கண்காணிப்பு, தரக் கட்டுப்பாடு, திட்ட அனுமதியின்படிதான் கட்டிடம் முழுமை அடைந்துள்ளது என்பதை உறுதி செய்தல் ஆகியவற்றை பதிவு பெற்ற இன்ஜினீயர்கள்தான் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12 மீட்டர் உயரத்துக்குள் கட்டிடங்களை கட்டுவதென்றால் அதற்கு பதிவுபெற்ற கட்டிடக் கலை நிபுணர் அல்லது பதிவுபெற்ற பொறியாளரின் அனுமதியைப் பெறவேண்டும். மிக உயரமான கட்டிடங்கள் தவிர, 12 மீட்டருக்கு மேல், 18.30 மீட்டருக்குள் கட்டுமானங்களைக் கட்டும்போது பதிவு பெற்ற டெவலப்பரிடம் அனுமதி பெற வேண்டும்.
இவர்கள் தவிர, ஸ்டக்சுரல் இன்ஜினீயர், கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினீயர், ஜியோ டெக்னிக்கல் இன்ஜினீயர் ஆகியோரிடமும் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னர் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு வழங்கப்பட்ட திட்ட அனுமதியின்படியே குறிப்பிட்ட கட்டுமானம் கட்டப்பட்டுள்ளது என்பதை இன்ஜினீயர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே கட்டிட நிறைவு சான்று வழங்கப்படும்.
அவ்வாறு கட்டப்படும் கட்டிடத்தில் பெரிய விரிசல், இடிந்து விழுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் இன்ஜினீயர்களின் பதிவு ரத்தாகும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.