வீடு வாங்கத் திட்டமிடுகிறீர்களா? அப்ப இதைப் படிங்க..!

வீடு வாங்கத் திட்டமிடுகிறீர்களா? அப்ப இதைப் படிங்க..!

தற்போது  வீடு வாங்கும் எண்ணம் உங்களுக்கு இருப்பின், உங்கள் சொந்த உபயோகத்திற்காக மட்டும் வாங்குங்கள். இது முதலீடு செய்வதற்கான சரியான களம் அல்ல, ஏனெனில் அடுத்து வரும் இரு ஆண்டுகளிலும் சொத்துக்களின் மதிப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்பே இல்லை.

வீடு  வாங்குவதற்குத் திட்டமிடுகிறீர்கள் என்றால், அதனை வாங்குவதற்கு இதுவே சரியான சமயம். ஏனெனில் வட்டி விகிதங்கள் மிகவும் குறைந்திருப்பதோடு, பெருமளவில் வீடுகளைக் கட்டி முடித்துள்ள நிறுவனங்கள், அவற்றை விற்றால் போதும் என்ற நோக்கில் சலுகை விலையில் விற்கத் தயாராக உள்ளனர்.

சரியான வாய்ப்பு 

ரியல் எஸ்டேட்  ரெகுலேட்டரி அத்தாரிட்டி (ஆர்இஆர்ஏ) போன்ற ஒழுங்குமுறை, நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் ஒழுங்கு நடவடிக்கைகளினால், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலானோர் புதிய ப்ராஜெக்ட்கள் தொடங்குவதை விடுத்து, முடிக்கப்படாத ப்ராஜெக்ட்களை விரைவாக முடித்துக் கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

பொற்காலம் 

எனவே,  வீடு வாங்க விரும்புவோர் அடுத்த மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குள் முடித்துக் கொடுக்கப்படும் ப்ராஜெக்ட்களைக் கூடத் தேடித் தேர்வு செய்து கொள்ளலாம். ஆகையால், இது வீடு வாங்குபவர்களுக்கான பொற்காலம் எனலாம். வீடு வாங்குவோர் சொத்தில் முதலீடு செய்வதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை என்ற பட்டியல் பின் வருமாறு:

RERA தளம்

முக்கியமாக,  முதலில் நீங்கள் எந்த மாநிலத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களோ, அம்மாநிலத்தின் RERA வெப்சைட்டிற்குள் லாக்-இன் செய்யுங்கள். விரைவாக முடித்துத் தரப்படக்கூடிய ப்ராஜெக்ட் எனில், அதனைக் கட்டியவர், தன் ப்ராஜெக்ட்டை அம்மாநிலத்தில் அமையப்பெற்றுள்ள ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்துள்ளாரா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். பின் அவரைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள்.

 இதுவரை  அவரது நிறுவனம் கட்டி முடித்துக் கொடுத்துள்ள ப்ராஜெக்ட்களின் எண்ணிக்கையை ஆராயுங்கள்.

ஆர்இஆர்ஏ முத்திரை உள்ளதா என்று பரிசோதியுங்கள்: 

RERA  அமைக்கப் பெற்றதற்குப் பின் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்துக் கட்டுமானங்களுக்கும் ஆர்இஆர்ஏ பதிவு எண் ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. அம்முத்திரை உள்ளதா என்று பாருங்கள். இது உணர்த்தக்கூடியது என்னவென்றால், அக்கட்டுமான நிறுவனம் அனைத்துச் சட்ட விதிகளுக்கும் உட்பட்டே தனது கட்டிடங்களைக் கட்டியுள்ளது என்பதைத் தான். ஆர்இஆர்ஏவுக்குப் பிறகான காலகட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட அக்கட்டுமான நிறுவனத்தின் கட்டிட வரைபடங்கள் மற்றும் அக்கட்டிடத்தில் உள்ள தளங்கள் மற்றும் டவர்களின் எண்ணிக்கை, இனிமேல் கட்டுவதற்கெனத் திட்டமிடப்பட்டுள்ள டவர்கள் உள்ளிட்ட தகவல்கள் போன்றவற்றை அந்நிறுவனத்தின் இணைய தளத்தில் காணலாம். மேலும் குறிப்பிட்ட அதிகாரியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ள யூனிட்கள், டவர்கள் மற்றும் தளங்களின் எண்ணிக்கை போன்ற தகவல்களையும் சேகரியுங்கள்.

நில பயன்பாடு/உரிமை: 

RERA என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தாலும், நில உரிமை பற்றி உங்களுக்கு உறுதியான நம்பிக்கை இல்லாதிருப்பின், நில உரிமை மற்றும் பயன்பாடு தொடர்பான நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் பெற சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை மற்றும் வளர்ச்சிக்கான அதிகாரிகளை அணுகினால், அவர்கள் உங்களுக்கு உதவக்கூடும். உங்கள் பயத்திலும் நியாயம் இல்லாமலில்லை. ஏனெனில், கடந்த காலங்களில் சில கட்டுமான நிறுவனங்கள் தமக்குச் சொந்தமல்லாத நிலங்களில் வீடுகளைக் கட்டி விற்று, வாங்கியவர்களை ஏமாற்றியுள்ளனர். சில சமயங்களில், தமக்குச் சொந்தமான நிலத்தின் பயன்பாட்டை விவசாயம் என்பதிலிருந்து குடியிருப்பு என்று மாற்றாமலேயே குடியிருப்புகளைக் கட்டுவதும் நடக்கத் தான் செய்கிறது.

அமைந்துள்ள இடம்

வீடு வாங்குவோர்  அது பொருத்தமான இடத்தில் அமைந்துள்ளதா என்று பார்த்து வாங்குவது அவசியம். வீட்டை அடைவதற்கு ஒழுங்கான சாலை வசதிகள் உள்ளனவா, அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்குப் போதுமான கடைகள் அருகில் உள்ளனவா, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவை அருகாமையில் உள்ளனவா என்பது போன்ற பல விஷயங்களைக் கூர்ந்து கவனித்துப் பின் முடிவு செய்ய வேண்டும். வீட்டிலிருந்து உங்கள் பணியிடம் எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது என்பதையும் போக்குவரத்து வசதிகள் சரிவர உள்ளனவா என்பதையும் மிக முக்கியமாக ஆராய வேண்டும்.

எஃப்ஏஆர்/விலைக்கு வாங்கக்கூடிய எஃப்ஏஆர்: 

சில சமயங்களில், கூடுதலான எஃப்ஏஆர் வைத்திருப்பின் முதலில் ஒப்புதல் வழங்கப்பட்ட பரப்பளவைக் காட்டிலும் அதிகமான பரப்பளவில் கட்ட அனுமதி கிடைக்க வாய்ப்பு இருப்பதினால், கட்டுமான நிறுவனங்கள் கட்டிடங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே கூடுதலான எஃப்ஏஆரை (ஃப்ளோர்-ஏரியா ரேஷியோ) விலைக்கு வாங்க முனைவர். கூடுதலான எஃப்ஐஆர் இருக்கும் தைரியத்தில் அக்கட்டுமான நிறுவனம், வாங்குவோருக்கு எவ்வித சந்தேகமும் வராதவாறு அசலான லே-அவுட் வரைபடத்தில் சற்றே மாற்றங்கள் செய்து, பசுமையாக இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்ட இடத்தில் கூடுதலான டவர்களைக் கட்டி முடிக்கின்றன.

பூர்த்தியடைந்ததற்கான சான்றிதழ்:

ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ள வீட்டை வாங்கவோ அல்லது கை மாற்றி விடப்படும் வீட்டை வாங்கவோ நீங்கள் திட்டமிட்டிருப்பின், அந்த ப்ராஜெக்ட் பூர்த்தி அடைந்ததற்கான சான்றிதழைப் பற்றிய தகவல்களைக் கேட்டு வாங்குங்கள். வீட்டைக் கட்டியவர் அனைத்து ஒப்புதல்களையும் பெற்றிருக்கிறார் என்பதனை உறுதி செய்யக்கூடிய ஒரே ஆதாரம் அந்த டாகுமெண்ட் மட்டுமே.

கட்டப்பட்டுத் தயார் நிலையில் உள்ள வீடு கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டை விடச் சிறந்ததா?: 

நிச்சயமாகச் சிறந்ததே, ஏனெனில் ஒரே சமயத்தில் நீங்கள் வாடகை மற்றும் இஎம்ஐ கட்ட வேண்டிய அவசியமில்லை என்பதோடு கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டில் ஏற்படக்கூடிய தாமதப் பிரச்சினைகளும் இருக்காது. ஆனால் இவை விலை அதிகமாக இருக்காதா? ஏகப்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விற்பனைக்கு உள்ள இப்போதைய நிலையில் விலையைப் பெருமளவில் குறைப்பதற்கு நிறுவனங்கள் தயாராகவே உள்ளன. சற்றே மெனக்கெட்டால் சகாயமான விலையில் நல்ல வீட்டை நிச்சயமாக வாங்க முடியும். ஏராளமான வீடுகள் கட்டி முடித்து விற்பனைக்குக் காத்திருப்பது வீடுகளின் விலைக்குறைப்பில் நன்றாகவே உதவியுள்ளது. கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடுகளைப் பொறுத்தவரை, ஆர்இஆர்ஏ நிறுவனம், ஒழுங்குமுறை அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் கட்டுமான நிறுவனங்கள் வீடுகளை முடித்துத் தர வேண்டும் என்றும் அவ்வாறு முடிக்கத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் பல்வேறு கெடுபிடிகள் விதித்துத் தகுந்த பாதுகாப்பை வழங்கி வருகிறது.

Resale மற்றும் நேரடியாக வாங்குதலுக்கு இடையிலான ஒப்பீடு: 

ரீஸேல் வீடுகளைப் பொறுத்தவரை விருப்பத் தேர்வுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு, ஆனால் வீட்டை விற்பவரின் கஷ்டமான சூழ்நிலையைப் பொறுத்து விலையைக் குறைத்துப் பேரம் பேசலாம். அப்படி வாங்கும்போது அனைத்துச் சட்டப்பூர்வமான டாகுமெண்டுகளும் சரிவர உள்ளனவா என்பதைக் கட்டாயம் ஆராய வேண்டும். மேலும், வீட்டை விற்பவர் அனைத்து இஎம்ஐகளையும் உரிய நேரத்தில்; செலுத்தியுள்ளாரா என்பதையும் வங்கி அல்லது கட்டுமான நிறுவனம் அல்லது மெயிண்டனென்ஸ் அலுவலகம் போன்றவற்றில் செலுத்த வேண்டிய கடன் தொகை எதுவும் நிலுவையில் உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மூலதன மதிப்பேற்றம்: நன்றாக நினைவில் கொள்ளுங்கள்! தற்போது வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், உங்களின் சொந்த உபயோகத்துக்கு என்றால் மட்டுமே வாங்குங்கள். முதலீடு செய்வதற்கான களமாகத் தற்சமயம் கட்டுமானத் துறை இல்லை. மேலும் அடுத்து வரும் இரு ஆண்டுகளில் சொத்துக்களின் விலையில் மதிப்பேற்றம் இருக்கவும் வாய்ப்பில்லை.