இந்தியர்கள் ஏன் நிலத்தை ஒரு முக்கிய சொத்தாகக் நினைக்குறாங்கன்னு தெரியுமா?
இன்னும் சொல்லப் போனால், நன்கு கவனித்தால் பல மத்திய அமைச்சர்கள் வைத்துள்ள சொத்துக்களில் பெரும்பாலானவை நிலங்களாகத்தான் இருக்கும். எனவே சாமானியன் இதற்கு ஒன்றும் விதிவிலக்கல்ல.
ஏன் அப்படி?
டிசைன் அப்புடி. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சொல்ற மாதிரி, இந்த நிலத்துல முதலீடு செய்வதும் அப்படித்தான். உண்மையில், இந்த வழக்கத்தை இந்தியர்கள் தங்கள் முன்னோரிடமிருந்து கற்றுக் கொண்டுள்ளனர். புதிது புதிதாக பல சொத்து வகைகள் தோன்றினாலும் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த ரியல் எஸ்டேட் எனப்படும் வீடு-மனை முதலீடு இந்தியர்களிடையே தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வந்துள்ளது.
எச்சரிக்கையுணர்வு
எந்த சொத்தை வாங்குவதென்றாலும் மிகவும் எச்சரிக்கையுணர்வுடன் செயல்படும் இந்தியர்களின் இந்த வழக்கம் ஒரு நல்ல தேர்வாக நிலத்தை கருதுகிறது. நிலத்தின் தேவை அதிமாக இருப்பதால் இது கொள்ளை லாபம் தரும் ஒரு வழியாக இருக்கிறது.
குறைவாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை
பொருளாதாரத்தில் ஒரு நாடு எவ்வளவு மோசமாக இருந்தாலும், அதனால் வரும் பாதகங்கள் இந்த நிலச் சொத்துக்களை அவ்வளவாக பாதிக்காது. உதாரணமாக, நோய்டாவில் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்க உங்களுக்கு 50 லட்சம் தேவைப்பட்ட்தென்றால், இன்றைக்கு தலைநகரில் சொத்துச் சந்தை மந்தமாக இருந்தாலும் அதன் விலை அதைவிடக் குறைவாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. மொத்தத்தில் அதன் விலை நிலையாக இருக்கவோ அல்லது உயரவோ மட்டுமே வாய்ப்பிருக்கிறது.
எந்த ஒரு வீழ்ச்சியும் தற்காலிகமானது தான்
நிலம் ஒரு அசையாச் சொத்து என்பதோடு இதன் சந்தையில் ஏற்படும் தொய்வு ஒரு தற்காலிக நிலைதான். பங்குகள், சரக்குகள் போன்ற பிறச் சொத்துக்களைப் போல் அல்லாமல் இந்த வீடுமனை சந்தை ஒரு நல்ல தற்காப்பைக் கொண்டுள்ளது.
இந்தியர்களின் எச்சரிக்கையுணர்வு இதற்கு ஏதுவாக இருப்பதால் அவர்கள் நிலத்தில் முதலீடு செய்வதையே அதிகம் விரும்புகிறார்கள்.
வளர்ச்சி வாய்ப்புக்கள்
இந்தியா ஒரு வளர்ந்துவரும் நாடு என்பதோடு நாடு முழு வளர்ச்சியை எட்ட நகர அடிப்படைக் கட்டமைப்புகள் இன்னும் பல மடங்கு நன்கு வளர்ச்சியடைய வேண்டியிருக்கிறது. இதனால்தான் நிலச் சந்தைகளில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு நல்ல பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பங்குதாரர்களாக, இந்த முதலீட்டாளர்கள் மற்ற எந்த சொத்தில் முதலீடு செய்பவர்களையும் விட அதிக இலாபம் ஈட்ட முடியும் எனக் கருதுகிறார்கள்.
சொந்தமண்
எலிவளையானாலும் தனிவளை வேண்டும் என்பது இந்தியர்களின் எண்ணம். பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையின் மொத்த சேமிப்புகளையும் ஒரு இடம் வாங்கவும் அதனை எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்ளவும் விழைகின்றனர். வாடகை வீட்டில் எவ்வளவு வசதியிருந்தாலும், பங்கு வர்த்தகம் எவ்வளவு லாபம் தந்தாலும் முதலீடு என்று வரும்போது இந்தியர்களின் முதல் தேர்வு நிலம் அல்லது வீடாகத் தான் இருக்கும். இந்த இயற்கையாகவே அமைந்த எண்ணமானது ஒவ்வொரு இந்தியரையும், அவர் பணக்கார்ரோ அல்லது ஏழையோ, நிலச்சந்தைகளுக்கு வரத் தூண்டுகிறது என்பது நிதர்சனம்.