ஹோம் இன்சூரன்ஸ் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!!

ஹோம் இன்சூரன்ஸ் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!!

வீட்டைக்  கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பார்கள். பெரும்பாலானோர் அவ்வளவு சிரமப்பட்டு கட்டும் வீட்டிற்கு காப்பீடு ஏதும் செய்வதில்லை. வங்கி கடன், அரசு கடன் ஆகியவை பெற்று வீடு கட்டுபவர்கள் கட்டாயமாக காப்பீடு செய்ய வேண்டும் என்பதால் அவர்கள் மட்டும் வீட்டின் மீதான காப்பீட்டு திட்டத்தில் சேர்கிறார்கள். அதுவும் அந்த கடன் முடியும் வரை மட்டுமே.

அந்த  வீட்டிற்கான காப்பீடு செய்தவர்களும், தாங்கள் எடுத்துள்ள வீட்டுக் காப்பீடு பாலிசியில் என்னென்ன நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன என்பது குறித்த விழிப்புணர்வு என்பது கொஞ்சம் கூட அற்றவர்களாகவே உள்ளனர். அவர்களுக்காவே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதும், செய்ய வேண்டியதும் இதோ.

கனவு வீடு 

பிரகாஷ்  பள்ளி ஆசிரியராக வேலை செய்யும் இவர் ஒரு கட்டிய வீட்டை வாங்கினார். அந்த வீட்டிற்கு காப்பீட்டு பாலிசியும் எடுத்தார். 

அந்த  வீட்டின் பாத்ரூமில் இருந்த கெய்செர் தண்ணீர் சூடேறி அளவுக்கதிகமாக இயங்கி தீ பிடித்து அந்த வீட்டின் பாதி உடமைகள் அழிந்தன.

அவர்  உரிய இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சென்று தொடர்பு கொண்ட போது அவரது பாலிசி இந்த விபத்துக்கான நன்மைகளை உள்ளடக்கியது அல்ல என்று தெரிந்து கொண்டார். 

ஆனால் பிரகாஷ் பாலிசி ஆரம்பிக்கும்போது அவரது முகவர் இயற்கைப்பேரழிவு, தீ விபத்து, திருட்டு போன்றவற்றிலிருந்து இந்த காப்பீடு உதவும் என்று கூறியே சேர்த்தார். ஆனால் இப்போது அவருக்கு கிடைத்த தகவல்கள் வேறு மாதிரியாக இருப்பதைக் கண்டு மிக்க கவலைக்குள்ளானார்.

காப்பீட்டு திட்டம் 

இதிலிருந்து  நீங்கள் அறிவது உங்கள் வீட்டு காப்பீட்டு திட்டத்தின் சாதக பாதக அம்சங்களை நீங்கள் முற்று முழுதும் அறிந்திருக்க வேண்டும் என்பதாகும். உங்கள் பாலிசியை நீங்கள் கையொப்பமிடும் முன் முழு நிபந்தனைகளையும் ஒரு முறை சரிபார்த்திருக்க வேண்டும்.

நஷ்டங்கள் 

நீங்கள்  ஒரு வீடு காப்பீட்டு பாலிசி பெற்ற பின்னர், நீங்கள் பாலிசி எடுத்துள்ள நிறுவனம் உங்கள் வீடு கட்டிடம், அதற்குள் உள்ள பொருள்கள் ஆகியவற்றிற்கு உத்திரவாதமளிக்கும்.

 ஏற்படும்  நஷ்டங்கள் மனித தவறுகளால் ஆனதோ அல்லது இயற்கைப் பேரிடர்களால் ஆனதோ என்பது பரிசீலிக்கப்படும்.

இயற்கைப் பேரிடர்

பெரும்பான்மையான  பாலிசிகள் இயற்கைப் பேரிடர்களான சூறாவளி, வெள்ளம், இடி, மின்னல் மற்றும் புயல் ஆகியவைகளால் ஏற்படும் உற்பாதங்களுக்கு காப்பீடு அளிக்கும்.

 மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழிவுகளான தீ வைப்பினால் ஏற்படும் இழப்புகள், விமான விபத்தினால் ஏற்படும் இழப்பு, கலவரம், வேலை நிறுத்தம் மற்றும் ஏவுகணை பரிசோதனையின்போது ஏற்படும் விபத்துகள் போன்றவற்றிற்கும் காப்பீடு கிடைக்கும்.

நில நடுக்கம்

நில நடுக்கம்  போன்ற துயர சம்பவங்களினால் ஏற்படும் இழப்புகளுக்கு இந்த காப்பீடு பொதுவாக கிடைப்பதில்லை. அதற்கும் உங்களுக்கு காப்பீடு தேவை எனில், உங்கள் விருப்பத்தை தேர்வு செய்து, அதற்கான கூடுதல் பிரிமியம் செலுத்தினால் இந்த வசதி உங்களுக்கு கிடைக்கும். இதே போல்தான் கொள்ளை, திருடு போன்றவற்றிற்கும்.

கொள்ளை திருட்டு

கொள்ளை  திருடு போன்றவற்றிற்கான காப்பீடு நகை, விலை உயர்ந்த நவரத்தின கற்கள் போன்ற பொருள்கள் அவற்றிற்குரிய பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருந்தால் மட்டுமே கிடைக்கும்.

எவை எவை காப்பீட்டில் உள்ளடங்கவில்லை? 

எந்த எந்த பாதிப்புகள் சொத்துகளுக்கான காப்பீடுகளில் அடங்காது என்பது குறித்து நீங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். 

ஒவ்வொரு ஆண்டும் உங்கள் சொத்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பல்வேறு காரணங்களால் மதிப்பு குறைவுபட்டுக் கொண்டே வரும் என்பதை நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும். இந்த இழப்புகளுக்கு நீங்கள் காப்பீடு உரிமை கோர முடியாது.

மின்சார மற்றும் மின்னணு சாதனங்கள் 

மின்சார மற்றும் மின்னணு சாதனங்கள் அளவுக்கு மீறி இயங்கி அதனால் ஏற்படும் தீ விபத்துகளுக்கு காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் காப்பீடு வசதி அளிப்பதில்லை. இதனாலேயே பிரகாஷ்க்கு மறுக்கப்பட்டது.

 திருட்டுகளுக்கு காப்பீட்டு வசதி பெற்றிருந்தாலும், பணம் திருடு போவதற்கு இந்த காப்பீடு உரிமை கோர முடியாது.

போர்

உங்கள் சொத்துக்கள் ஒரு படை எடுப்பினாலோ அல்லது வெளிநாட்டினால் ஏற்பட்ட ஒரு போர் மூலம் அழிவு ஏற்பட்டாலோ உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனம் அவற்றிற்கு பொறுப்பேற்காது.

காப்பீடு 

ஒரு வீட்டின் மீதான காப்பீடு என்பது அந்த வீடு இருக்கும் நில மதிப்பு, அந்த இடம், கட்டிடம் அனைத்தையும் உள்ளடக்கியது அல்ல. வீடு கட்ட ஆன கட்டிட செலவை மட்டுமே கருத்தில் கொண்டு காப்பீடு வழங்கப்படும். 

என்ன?  இனிமேல் நீங்கள் காப்பீடு செய்யும்போது கையொப்பமிடும் முன்பாக இவற்றை எல்லாம் பரிசீலித்து காப்பீடு செய்வீர்கள்தானே?