வீடு வாங்கியவுடன் நீங்க செய்ய வேண்டிய முக்கியமான வேலை இதுதான்..!
வீட்டு லோன் வாங்க முடிவு செய்துவிட்டால் வங்கி கேட்டிருக்கும் அனைத்து டாக்குமெண்ட்களையும் தவறாமல் சமர்ப்பிக்கவும், ஒவ்வொன்றாகச் சமர்ப்பிக்க வேண்டாம். மொத்த டாக்குமெண்ட்களும் தயாரானதும் சமர்ப்பியுங்கள். ஆனால் அதற்கு முன்னர் அனைத்து முக்கியமான டாக்குமெண்ட்களையும் தேவையான காப்பிகளை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். வங்கியிடம் நீங்கள் லோன் ஒப்பந்தம் போடும் முன் இவைகளைச் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்டர்மார்க் மிகவும் அவசியம்:
ஒரு வீட்டை வாங்கி முடித்தவுடன் உடனே நாம் செய்ய வேண்டிய அடுத்த வேலை வீட்டின் சொத்துவரியில் உள்ள பெயர் மாற்றம், மின்சாரக் கனெக்சனில் உள்ள பெயர் மாற்றம் ஆகியவற்றைச் செய்யவேண்டும். இதற்கெனச் சில ஏஜண்டுகள் இருக்கின்றனர். ஆனால் அவர்களை அணுகும்போது அடோப் ரைட்டரில் வாட்டர் மார்க் செய்யப்பட்ட காப்பிகளை மட்டும் கொடுக்கவும். ஒரிஜினலை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து ஏஜண்டுகளிடம் கொடுத்தால் அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு. எனவே சுதாரிப்பாக இருந்து கொள்ளுங்கள்.
இதையும் நீங்கள் கண்டிப்பாகச் செய்யணும்:
ஒரு வீட்டை வாங்கி முடித்ததும் டயர்டு ஆகி ஓய்வு எடுக்கத் தொடங்கி விடக்கூடாது. வீட்டுப் பத்திரம் கைக்கு வந்தவுடன் நீங்கள் அந்த வீட்டின் முக்கியமான டாக்குமெண்டுகளை உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும் குறிப்பாகத் தண்ணீர் கனெக்சன், எலக்ட்ரிக் கனெக்சன், சொத்து வரி பெயர் மாற்றம், பட்டா பெயர் மாற்றம் மற்றும் என்.ஓ.சி ஆகியவற்றைப் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.
வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்:
வீடு வாங்கியவுடன் பத்திரம் உங்கள் பெயருக்கு மாறியவுடன் புதிய வீட்டின் முகவரியை உங்கள் அனைத்துச் சான்றிதழ்களிலும் மாற்றிவிட வேண்டும். குறிப்பாகச் சொத்துவரி, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு, மற்றும் உங்களிடம் உள்ள அனைத்து முக்கிய ஆவணங்களிலும் புதிய முகவரி இருக்கும்படி மாற்றம் செய்யுங்கள். இது சின்ன வேலைதானே என்று அசால்ட்டாக இருந்துவிட வேண்டாம். இது மிகவும் அவசியமானது என்பதை நீங்கள் பின்னால் உணர்வீர்கள்.
குடியிருப்பாளர்கள் சங்கத்திலும் பெயர் மாற்றம்:
நீங்கள் வீடு வாங்கிய பகுதியில் குடியிருப்பாளர்கள் சங்கம் இருந்தால் உடனே அதில் உங்கள் வீட்டின் ஜெராக்ஸ் காப்பியை கொடுத்து இணைந்து விடுங்கள். சங்கத்தின் நிர்வாகிகளிடம் இதுகுறித்த மேல்விபரங்களைக் கேட்டு இதையும் செய்து விட்டால் அவ்வளவுதான் உங்கள் வேலை முடிந்தது. அப்பாடா!!! இப்போது புரிகிறதா முதல் லைனில் உள்ள வீட்டை கட்டிப்பார்! என்ற பழமொழியின் அர்த்தம்.