பில்டர்கள் கவனிக்கவேண்டியவை
ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள உலக அளவிலான தொழில் நுட்ப வளர்ச்சியை பில்டர்கள் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றில் முக்கியமாக பி.ஐ.எம் என்று சொல்லப்படும் பில்டிங் மாடலிங் இன்பர்மேஷன் என்ற தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். இந்த முறையின் மூலம் ஒரு கட்டிடத்தின் நிகழ்காலம் மற்றும் எதிர்கால நிலையை பற்றி தெள்ளத் தெளிவாக அறிந்து பராமரிப்புகளை மேற்கொள்ள இயலும்.
நகர்ப்புற உள் கட்டமைப்புகளுக்கான மாதிரி திட்டங்கள் மற்றும் அவற்றின் முப்பரிமாண தோற்றம் ஆகியவற்றை சிறப்பாக வடிவமைப்பு செய்வதற்கும் இந்த தொழில்நுட்பம் தக்க துணையாக அமைகிறது.
மேலும், ரியல் எஸ்டேட் பிசினஸ் பிளான் ரீதியாக என்ஜினியர்கள், ஆர்க்கிடெக்ட், இன்டீரியர் டிசைன் வல்லுநர்கள், சட்டரீதியான ஆலோசனைகளை அளிக்கும் வழக்கறிஞர்கள் ஆகியோர்களுடைய ஒத்துழைப்பு இந்த துறையில் மிகவும் அவசியம். தொழில்ரீதியாக புராஜக்ட் பார்ட்னர் என்ற வகையில் அமையக்கூடிய ஜாயின்ட் வென்சர் என்ற ஒப்பந்த ரீதியிலான பங்குதாரர் மூலம் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் முறைகளையும் அறிந்திருக்க வேண்டும்.
விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மெண்டடு ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்கள் மூலமாக கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு முன்னதாகவே அவற்றை காட்சியாக கண்டு வாடிக்கையாளர்கள் விருப்பங்களுக்கு ஏற்ப உள்கட்டமைப்பு, பெயிண்டிங், பர்னிச்சர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் வடிவமைப்பு செய்துகொள்ள முடியும்.
ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, கட்டிடக்கலை பணிகளின் செயலாக்கம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் பில்டர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது. ‘ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட், ‘இன்ப்ரா ஸ்ட்ரக்சர் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட்’ மற்றும் ‘ரியல் எஸ்டேட் மியூச்சுவல் பண்ட்’ ஆகிய முதலீட்டு அமைப்புகளின் மூலமாக பில்டர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.