சொந்த வீடு வாங்க இது சரியான நேரமா? ரியல் எஸ்டேட் துறையின் உண்மையான நிலவரம்..!
சொந்த வீடு வாங்க இது சரியான நேரமா? ரியல் எஸ்டேட் துறையின் உண்மையான நிலவரம்..!
கொரோனா காலகட்டத்தில் முடங்கிபோன முக்கிய துறைகளில் ரியல் எஸ்டேட் துறையும் ஒன்று. இதற்கு பல காரணங்கள் உண்டு. குறிப்பாக கடந்த 2016ம் ஆண்டில் இருந்தே முடக்கம் தான் என்கின்றனர் நிபுணர்கள்.
ஏனெனில் எப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை வந்ததோ, அப்போதிருந்தே ரியல் எஸ்டேட் துறையில், நிதி நெருக்கடி நிலவி வருகின்றது. அதன் பிறகு ஜிஎஸ்டி என அடுத்தடுத்த பிரச்சினைகள் வந்தன.
தற்போது கொரோனாவால் அடிப்படை வாழ்வாதாரத்திற்கே பலரும் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பலரின் வேலையும் பறிபோயுள்ளது. இந்த நிலையில் அத்தியாவசியம் தவிர அனைத்து முதலீடுகளும் தவிர்க்கப்பட்டன. எனினும் தற்போது பொருளாதாரம் வேகமாக மீண்டு வந்து கொண்டுள்ளது.
முடங்கி போன ரியல் எஸ்டேட் துறை
இதனால் வீடுகள், அலுவலகங்கள் என சொத்து விற்பனைகள் முற்றிலும் முடங்கியது. சொல்லப் போனால் வாங்க ஆள் இல்லாமல் கட்டி வைத்த வீடுகள் காற்று வாங்கிக் கொண்டிருந்தன. இதே கட்டாமல் பாதியில் நிற்கும் வீடுகள் நிதி நெருக்கடியினால் தேங்கி நிற்கின்றன. இப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் ரியல் எஸ்டேட் துறையானது முடங்கியிருப்பதில் பெரும் ஆச்சரியம் ஏதும் இல்லை.
இது வீடு வாங்க சரியான நேரமா?
சொத்து ஆலோசனை நிறுவனமான அனராக் பிராபர்டி, இணையத்தில் இது குறித்த ஒர் ஆய்வினை நடத்தியுள்ளது. அது இந்தியாவில் தற்போது வீடு வாங்க சரியான நேரமா என்று? ஏனெனில் பல சலுகைகள், வட்டி குறைவு இப்படி பல சாதகமான காரணிகள் உள்ளன. இந்த நிலையில் இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் 62% பேர் இது வீடு வாங்க சரியான நேரம் தான் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனராம். ரியல் எஸ்டேட் துறையில் நுழைய, அதாவது முதலீடு செய்ய சரியான நேரம் தான் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றது.
கொரோனாவால் பாதிப்பு
ஜனவரி 2021ல் நடத்தப்பட்ட இந்த ஆன்லைன் கணக்கெடுப்பில், கிட்டதட்ட 3,900 பேர் பங்களித்துள்ளனர். கொரோனா வீடு வாங்குபவர்களின் முடிவுகளை கணிசமாக பாதித்துள்ளது.
இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் 24% பேர் ஏற்கனவே தங்கள் சொத்துகளுக்காக முன் பதிவு செய்துள்ளனர். பதிலளித்தவர்களில் 59% பேரின் முடிவினை இந்த கொரோனா மாற்றியுள்ளதாகவும் கூறியுள்ளது.
சந்தையை ஊக்கப்படுத்தும் வட்டி குறைவு
கொரோனாவினால் காரணமாக பொருளாதார நிலைமை மாறியுள்ள போதிலும் கூட, அவர்கள் முன்பதிவு செய்வதை தொடருவதாக கூறுகின்றனர். மேலும் இந்த கொரோனாவால் சலுகைகள் இருப்பதையும், குறைவான வட்டி விகிதம் உள்ளிட்ட பலவும் சந்தையை தற்போது ஊக்கப்படுத்துவதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
என்ன பட்ஜெட்டில் வீடு?
மேலும் இந்த ஆய்வில் அதிகபட்சமாக 45 லட்சம் வரையிலான வீடுகளையே பலரும் விரும்புவதாக, இந்த ஆய்வில் பங்களித்தவர்களில் 40% பேர் இதனையே விரும்புவதாகவும், இதே 45 - 90 லட்சம் ரூபாய் வரையிலான வீடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அதோடு தேவையில் 67% பெங்களூரு, புனே மற்றும் சென்னையிலிருந்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆர்வத்திற்கு முக்கிய காரணம்
இந்த ஆய்வில் பெரும்பாலானோர் அளித்த பதிலில் முக்கியமானது, குறைவான வட்டியில் கடன் கிடைப்பது தான். அதோடு கொரோனாவுக்கு பின்னர் இந்த விருப்பம் தொடர்ந்து அதிகரித்து கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் பங்களித்தவர்களில் சுமார் 57% பேர் இப்போது வங்கி பிக்ஸட் டெபாசிட், பங்கு சந்தை, தங்கம் உள்ளிட்ட முதலீடுகளை விட சிறந்ததாக நினைக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.