வீடு, நிலம் எது வாங்கினாலும் ஆதார் கட்டாயம் தேவை..!
வீடு, நிலம் எது வாங்கினாலும் ஆதார் கட்டாயம் தேவை..!
மோடி தலைமையிலான அரசு கருப்புப் பணத்திற்கு எதிராகத் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் 80%க்கும் அதிகமாகப் பணம் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாயைபுழக்கத்தில் இருந்து முழுமையாக நீக்கியது.
இந்த நடவடிக்கை வெற்றி அடையவில்லை என்றாலும் மத்திய அரசு தொடர்ந்து கருப்புப் பணத்தையும், கருப்புப் பணம் அதிகமாகப் புழங்கும் துறையையும் கண்காணித்து வருகிறது
இதன்படி தற்போது ரியல் எஸ்டேட் துறையைக் கையில் எடுத்துள்ளது மத்திய அரசு.
ஆதார் இணைப்பு
கருப்புப் பணத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையில் இது முக்கியமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. வீடு, நிலம், சொத்துப் பரிமாற்றம் என அனைத்து வகையிலான பரிமாற்றங்களுக்கும் ஆதார் இணைப்பைக் கூடிய விரைவில் கட்டாயமாக்கப்படலாம் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரியல் எஸ்டேட்
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் அதிகளவிலான கருப்புப் பணம் புழங்குவது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கும் நிலையில் இதனை முழுமையாகக் களையும் வகையில் சொத்து பரிமாற்றத்தின் போதும் ஆதார் இணைப்பைக் கட்டாயப்படுத்தும் நாள் தொலைவில் இல்லை என மத்திய வீட்டு வசதி துகை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார்.
வங்கி இணைப்பு
சொத்து பரிமாற்றத்தின் போது ஆதார் இணைப்பு சிறந்த ஐடியாவாக இருந்தாலும், தற்போது ஆதார் இணைப்பை வங்கிக்கணக்கு போன்ற பிறவற்றுடன் இணைக்கும் பணி தொடர்வதால், அடுத்தச் சில மாதங்களில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பினாமி சொத்துகள்
மோடியும் பல முறை பினாமி சொத்துகளைக் களையும் நடவடிக்கை குறித்துப் பேசியுள்ளார். இந்நிலையில் சொத்து பரிமாற்றத்தின் போது ஆதார் இணைப்புக் கருப்பு பண ஆசாமிகளுக்குப் பெரிய அளவிலான நெருக்கடியை அளிக்கும்.
மோசமான நிலை
ஏற்கனவே இந்திய ரியல் எஸ்டேட் துறை RERA மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில், அனைத்து விதமான சொத்து பரிமாற்றத்திற்கும் ஆதார் கட்டாயப்படுத்தினால் மொத்த ரியல் எஸ்டேட் வர்த்தகமும் பாதிப்படையும்.