புதிதாக வீடு கட்டும்போது எந்த வகை டைல்ஸைப் பயன்படுத்தலாம்?

புதிதாக வீடு கட்டும்போது எந்த வகை டைல்ஸை பயன்படுத்தலாம்?

புதிதாக வீடு  கட்டுபவர்களில் பலர் இப்போது டைல்ஸைப் பயன்படுத்தாமல் வீடு கட்டி முடிப்பதில்லை.  புதிதாக வீடு கட்டுபவர்கள் என்ன மாதிரியான டைல்ஸ்களை வாங்க வேண்டும், அப்படி வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

பொதுவாக, டைல்ஸில்  பல வகைகள் உண்டு. அவற்றில் நானோ (Nano), பி.ஜி.வி.டி (PGVT), டபுள் சார்ஜ் (Double charge), பார்க்கிங் (Parking), நார்மல் வாள் டைல்ஸ் (Normal wall tiles), வால் டைல்ஸ் வாட்டர்ப்ரூஃப் (Wall tiltes waterproof), ரூப் டைல்ஸ் – கூலிங் டைல்ஸ் (Roof titles), மேட் ஃபினிஷிங் டைல்ஸ் (Matt finishing tiles), எலிவேஷன் டைல்ஸ் (Eelevation tiles), டெக்கரேஷன் டைல்ஸ் (Decorration tiles) என்பவை அதிகமாகப் பயன்படுத்தப்படும் டைல்ஸ்கள் ஆகும். இனி இந்த டைல்ஸ் வகைகள் பற்றி சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

நானோ (Nano)

இந்த டைல்ஸ்  ஒரு அடிப்படை மாடல் ஆகும். தவிர, இது ஒரு லோ பட்ஜெட் டைல்ஸும்கூட.  இதில் அதிகமான கலர்களும் டிசைன்களும் கிடையாது. பொதுவாக, இது ஐவரி (Ivory) பேஸ்ட் கலர்களில்தான் இருக்கும். இந்த டைல்ஸ் சீக்கிரம் கலர் மங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. இது வியாபாரத்துக்குப் பயன்படுத்தும் கட்டடங்களுக்கு ஏற்றது. இந்த டைல்ஸ் சதுர அடி 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பாலிஷ்டு கிளேஸ்டு விட்ரிஃபைடு டைல்ஸ் (Polished glazed vitrified tiles)

இது நானோவுக்கு  அடுத்த வகை மாடல் ஆகும். இது நன்றாகப் பளபளக்கும். நடுத்தர பட்ஜெட்டில் வீடு கட்ட வேண்டும் என எண்ணுபவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.

இதில் பல டிசைன்கள் உள்ளன.  இது வீட்டில் பயன்படுத்த மட்டுமே ஏற்றது. வியாபாரம் சார்ந்த இடங்களுக்கு ஏற்றது இல்லை. ஏனென்றால், இது பளபளப்பாக இருப்பதால், கீறல் விழ வாய்ப்புண்டு. இந்த வகை டைல்ஸ் நானோ வகை டைல்ஸைவிட 10 ரூபாய் அதிகம்.

டபுள் சார்ஜ் (Double charge)

இது சாதாரணமான  டைல்ஸைவிட லேயர் கோட்டிங் கூடுதலாகக் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் பிளைன், டார்க் மற்றும் லைட் என டிசைன்கள் வேறுபடும்.  அமேசான் சீரீஸ் பார்ப்பதற்கு கிரானைட் போன்று தோற்றமளிக்கும். இந்த டைல்ஸில் டபுள் கோட்டிங் கொடுத்திருப்பதால், நீண்ட காலம் உழைக்கும்; தேய்மானமும் இருக்காது. நடுத்தர மற்றும் உயர்ந்த பட்ஜெட்டில் வீடு கட்ட நினைப்பவர்களுக்கு இது ஏற்றது. இதன் விலை அதன் நிறத்தைப் பொறுத்து வேறுபடும். ஒரு சதுர அடிக்கு 45 முதல் 50 ரூபாயில் விற்கப் படுகிறது.

பார்க்கிங் (Parking)

இது பொதுவாக கார்  மற்றும் பைக் பார்க் செய்யும் இடத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், திறந்தவெளியாகக் கிடக்கும் இடத்தில் (Open Area space) பயன்படுத்த இது சிறந்தது. இந்த டைல்ஸில் நார்மல் பார்க்கிங் டைல்ஸ் மற்றும் டிஜிட்டல் பார்க்கிங் டைல்ஸ் என இரு வகை உண்டு. நார்மல் பார்கிங் டைல்ஸ் என்பது அடிப்படை மாடல் ஆகும். டிஜிட்டல் பார்க்கிங் டைல்ஸில் நிறைய டிசைன்கள் உண்டு. இதுவே இந்த இரு வகை டைல்ஸ்களுக்கான வித்தியாசம் ஆகும். பொதுவாக, இது சறுக்கல் எதிர்ப்பு தன்மையுடன் இருக்கும் என்பதால்  வாகனத்தைப் பார்க் செய்தால், வழுக்கி விழாதபடிக்கு பிடிமானம் கிடைக்கும்.மேலும், சாதாரண டைல்ஸ்கள் பொதுவாக 8 மில்லிமீட்டர் அளவில் தடிமனாக இருக்கும். ஆனால், பார்கிங் டைல்ஸ்கள் 10 மில்லி மீட்டர் அளவில் தடிமனாக இருக்கும். இதனால் இந்த டைல்ஸ் அவ்வளவு எளிதாக டேமேஜ் ஆகாது. இந்த டைல்ஸ் சதுர அடி 32 முதல் 35 ரூபாய்க்குள் விற்கப்படுகிறது.

வால் டைல்ஸ் (Wall Tiles)

இந்த வகை  வால் டைல்ஸ்கள் பொதுவாக சுவரில் பெயின்ட் அடிப்பதைத் தவிர்க்க மற்றும் குளியலறையில் பயன்படுத்தப்படுகிறது. சுவரில் பெயின்ட் அடித்தால், சில வருடங்களுக்குப் பிறகு, நிறம் மங்கலாகிவிடும்; கறையும் படியும். அதற்குப் பதிலாக இந்த டைல்ஸைப் பயன்படுத்துவதால், நாம் அடிக்கடி பெயின்டுக்காகச் செய்யும் செலவு குறைகிறது.

இந்த டைல்ஸ் பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு நீடித்து உழைக்கும். மேலும், இந்த வகை டைல்ஸ்கள் அதிகமாக 15 X 10, 18 X 12, 2 X 1 ஆகிய அளவு களிலேயே அதிகமாக வாங்கப் படுகிறது. இந்த அளவுகளில் 18 X 12 அளவு ஒரு சீரான அளவில் இருப்பதால், மக்கள் இந்த அளவிலேயே அதிகமாக வாங்கு கின்றனர். இந்த டைல்ஸ்களைப் பயன்படுத்தும்போது ஒரு டைல்ஸ் மற்றும் அதன் அருகில் பதிக்கப்பட்டிருக்கும் டைல்ஸின் இடைவெளி அசிங்கமாக தெரி யாது. இந்த வகை டைல்ஸின் விலை இதன் அளவைப் பொறுத்து மாறுபடும். பொது வாக, இதன் விலை 26 முதல் 42 ரூபாயில் விற்கப்படுகிறது.

வாட்டர்ப்ரூஃப் வால் டைல்ஸ் (Waterproof Wall Tiles)

வாட்டர்ப்ரூஃப் வால் டைல்ஸ் பொதுவாக, குளியல் அறையில் அதிகமாகப் பயன் படுத்தப்படுகிறது. இந்த வகை டைல்ஸ்க்கும் நார்மல் வால் டைல்ஸ்க்கும் பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது. நார்மல் வால் டைல்ஸ் தண்ணீரை உறிஞ்சும். வாட்டர்ப்ரூஃப் டைல்ஸ் தண்ணீரை உறிஞ்சாது என்பதால், இந்த வகை டைல்ஸ், நார்மல் வால் டைல்ஸைவிட நீண்ட காலம் நீடித்து உழைக்கும். இந்த டைல்ஸின் விலை 28 முதல் 45 ரூபாயில் விற்கப்படுகிறது.

ரூஃப் டைல்ஸ் (Roof Tiles)

இந்த ரூஃப் டைல்ஸ் கூலிங் டைல்ஸ் என்றும் கூறப்படுகிறது. இதை வீட்டின் மொட்டை மாடியில் பதிக்க இப்போது அதிகமாக பயன்படுத்து கின்றனர். இந்த டைல்ஸ் வெப்பத்தை உள்ளிழுக்காது. இதனால் வீட்டினுள் வெப்பம் அதிகமாகத் தெரியாது. இதைப் பயன்படுத்து வதால், வாட்டர் லீக்கேஜ் கட்டடத்தின் மேற்கூரையில் இருக்காது. இந்த வகை டைல்ஸ்களில் அதிகமான டிசைன்கள் இருக்காது. குறிப்பிட்ட 4 முதல் 5 வகை டிசைன் மட்டுமே இருக்கும். இதன் விலை சதுர அடி 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மேட் ஃபினிஷ் டைல்ஸ் (Matt Finish Tiles)

இதில் சொரசொரப்புத் தன்மை லேயர் கொண்ட டைல்ஸாக இருக்கும். இந்த வகை டைல்ஸ் வெரண்டா, பால்கனி போன்ற இடங்களில் பயன்படுத்த ஏற்ற டைல்ஸ் ஆகும். இந்த வகை டைல்ஸ் வழுக்காது. மேலும், இந்த வகை டைல்ஸ் ஹாலில் பயன் படுத்தக்கூட ஏற்றது. முதியோர்கள் இருக்கும் அறையில் இந்த வகை டைல்ஸை அவர்களுக்குத் தரை வழுக்காமல் இருக்க பயன் படுத்தலாம். இந்த வகை டைல்ஸின் விலை சதுர அடி 35 முதல் 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

எலிவேஷன் டைல்ஸ் (Elevation Tiles)

கட்டடத்தின் தோற்றத்தை அழகாய் காட்ட இந்த வகை பயன்படுத்தப்படுகிறது. இந்த டைல்ஸ் அதிகமாகக் கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றத்தை அழகாய் காட்ட பயன்படுத்தப்படுகிறது. இது அதிக தடிமன் கொண்டதாக இருக்கும். இந்த டைல்ஸ்களில் நேச்சுரல் ஸ்டோன், 3D டிசைன் போன்ற டிசைன்களில் கிடைக்கிறது. இந்த டைல்ஸின் விலை அளவைப் பொறுத்து 40 முதல் 50 ரூபாயில் விற்கப்படுகிறது.

டெக்கரேஷன் டைல்ஸ் (Decoration Tiles)

இந்த வகை டைல்ஸ் பொதுவாக வீட்டின் உட்புறத் தோற்றத்தை அழகாய் காட்ட பயன்படுத்தும் டைல்ஸ் ஆகும். இந்த டைல்ஸில் விலங்குகள், இயற்கைக் காட்சிகள், கார்ட்டூன் படங்கள், கடவுள் படங்கள் எனப் பல வகைகள் உள்ளன. இந்த டைல்ஸின் விலை, அளவு மற்றும் தரத்தைப் பொறுத்து வேறுபடும். இந்த டைல்ஸில் தனித்தனி டைல்ஸை ஒன்றாகச் சேர்த்து ஒரு படமாக உருவாக்கும் டைல்ஸ் விலை குறைவாகும். ஒரே டைல்ஸில் ஒரு பெரிய படத்தைக் கொண்டிருக்கும் டைல்ஸ் விலை அதிகமாகும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

சரியான இடத்துக்கு, சரியான டைல்ஸைப் பயன்படுத்த வேண்டும். மேலும், டைல்ஸ் பதிக்கும்போது ஸ்பேசர் (Spacer) பயன்படுத்தி சரியான அளவில் பதித்தால் டைல்ஸ் நீண்ட நாள் வரும். இந்த வழிமுறையைப் பின்பற்றி நாம் டைல்ஸ் பதிக்கும்போது, ஒருவேளை ஒரு டைல்ஸ் டேமேஜ் ஆகிவிட்டால், அந்த டைல்ஸை மட்டும் நாம் எளிதாக மாற்றிவிட முடியும்’’

நன்றி: விகடன்