வீடு கட்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்..!
எங்கு அனுமதி வாங்க வேண்டும்?
கட்டடம் கட்ட வரைபட அனுமதி வாங்க மாநகராட்சியிலோ, உள்ளூர்த் திட்ட குழுமத்திலோ வரைபடம் வரைய அனுமதி பெற்ற பொறியாளர்களை அணுகுவது நல்லது.
Registered Engineer (RE), Registered construction Engineer(RCE), Registered structural Engineer (RSE), Registered geotechnical engineer(RGTE) எனப் பதிவு செய்யப்பட்ட பொறியாளர்களே வரைபட அனுமதிக்கு கையெழுத்திட முடியும். அவர்களின் மூலம் வரைபட அனுமதி பெற்று மேற்கூறியவர்களின் மேற்பார்வையிலேயே வீடு, கட்டடம் கட்டுவதால் மட்டுமே கட்டட நிறைவுச் சான்றிதழ் பெற்று பின்னர் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, சொத்து வரி நிர்ணயம் ஆகியவை பெற முடியும்.
வீடு கட்டும்போது விட வேண்டிய இடங்கள்...
உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற்ற பிளானில் உள்ளபடி, சதுர அடிப் பரப்பு, கட்டட உயரம், பக்கத் திறவிடம் ஆகியவற்றை மாற்றமின்றிக் கட்டுவதுதான் நல்லது. அதைவிடக் கூடுதல் சதுர அடியில் வீடு கட்டுவது, மாடித் தளங்களின் எண்ணிக்கை கூடுதலாகக் கட்டுவது, கட்டடத்தைச் சுற்றி விடப்படும் பக்கத் திறவிடத்தைக் குறைப்பது போன்றவை குற்றமாகும்.
அணுகுசாலையின் அகலத்தைப் பொறுத்து பக்கத்திறவிடம் விட வேண்டும். அல்லது கட்டடத்தின் உயரத்துக்கு ஏற்ப பக்கத்திறவிடம் விடப்பட வேண்டும். நமது மனை அமைந்துள்ள இடம் தொடர் கட்டடம் இருக்கும் பகுதி, பொருளாதாரத்தில் நலிந்த பகுதி, மற்ற பகுதிகள் என மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப கட்டடங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. மனையின் அளவு 1,000 சதுர அடி எனில், 2000 சதுர அடிக்கு மட்டுமே வீடு / கட்டடம் கட்ட முடியும். இதைத் தரை இடக்குறியீடு (F.S.I -Floor Space Index) எனக் குறிப்பிடுகிறார்கள்.
18.30 மீட்டர் வரை உயரம் கொண்ட கட்டடம் ‘உயரம் குறைவான கட்டடம்’ (Non - high rise building) ஆகும். அதற்கு மேல் உயரம் உள்ள கட்டடங்கள் ‘உயரமான கட்டடம்’ (High Rise Building) வகையைச் சார்ந்தது. அதாவது, 18.30 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டடம் கட்டுபவை என்பதாகும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என எந்த இடத்தில் வீடு அல்லது வணிக வளாகம் அல்லது கட்டடம் கட்டுவதாக இருந்தாலும் மேற்கூறிய கட்டட விதிமுறைகள் 100% பின்பற்றியே வரைபட அனுமதி பெறமுடியும்.
அதேபோல், வரைபட அனுமதி பெற்றபடியே கட்டடம் கட்டுவது ஒவ்வொருவரின் கடமையாகும். விதிமுறையை மீறி கட்டடம் கட்டுவதை அரசுத் துறையினரும், அங்கீகாரம் பெற்ற பொறியாளர்களும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சாதாரணக் குடியிருப்பு மட்டும் அல்லாமல், மனைப் பிரிவு (Layout) அமைப்பது, தொழிற்சாலை மனை அமைப்பது, பூங்கா/ வணிக மனைப் பிரிவு அமைப்பது, சிறப்புப் பொருளாதார மண்டல மனைப் பிரிவு அமைப்பது, சிறப்பு மற்றும் ஆபத்து விளைவிக்கக்கூடிய தொழிற் சாலைகள் மனைப்பிரிவு அமைப்பது, திறந்தவெளி இடம் மற்றும் பொழுதுபோக்கு பயன்பாட்டு இடம் அமைப்பது, விவசாயப் பணிக்கான அமைவிடம் அமைப்பது என அனைத்து வகையிலான மனைப் பிரிவு அமைப் பதற்கான சட்ட விதிமுறைகள் இந்த TNCBR 2019-ல் இடம் பெற்றுள்ளன.
எடுத்துக்காட்டாக, ஒரு கிரவுண்ட் மனையில் (5.5 சென்ட்) 40அடி அணுகுசாலையில் அமைந்திருந்தால், அதில் எப்படி வீடு கட்டலாம் என்று பார்ப்போம்.
முன்பக்கத் திறவிடம் 3 மீட்டர் (10 அடி) ஆகும் பின் பக்கத் திறவிடம் 1.50 மீட்டர் (5 அடி) ஆகும். பக்கத்திறவிடம் இருபுறமும் 1.5 மீட்டர் விடப்பட வேண்டும் எனில், பக்கத் திறவிடம் விட்டது போக, ஒரு தளம் 1,350 சதுர அடிக்குக் கட்டலாம் எனில், மூன்று தளங்கள் 1,350 சதுர அடியிலும் மீதி ஒரு தளம் 750 சதுர அடியிலும் என 4,800 சதுர அடிக்கு கட்டடம் கட்ட முடியும். (பார்க்க அட்டவணை 1 மற்றும் வரைபடம் 1)அதற்கான வரைபட அனுமதி உரிய உள்ளாட்சி அமைப்பிடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நான்காம் தளத்துக்கு அதிகமான உயரம் கட்டுவதோ,4,800 சதுர அடிக்கு கூடுதலாகக் கட்டுவதோ, பக்கத் திறவிடம் 1.5 மீட்டருக்கு குறைவாகவோ முன்பக்கத்திறவிடம் 3 மீட்டருக்கு குறைவாகவோ விட்டு கட்டடம் கட்டுவதோ குற்றமாகும்.
கட்டடம் கட்ட பதிவுபெற்ற பொறியாளரை அணுகி னால் மட்டுமே இதுபோன்ற கட்டட அனுமதி வரைபடம் பெற முடியும். அனுமதி பெற்று விதிமுறைகளைக் கடைப்பிடித்து கட்டடம் கட்டுவதே எதிர்காலத்தில் வரும் சட்ட நடவடிக்கைகளிலிருந்து கட்டடத்தைக் காக்க முடியும்.
சமீப காலங்களில் விதிமுறை மீறிய கட்டடங்களுக்கு சீல் வைப்பதும், இடிக்கப்படுவதும் அனைவரும் அறிந்ததே. எனவே, வீடு கட்டும்முன் உஷாராக இருப்பதே சரி!