புதிய வீடு வாங்குவோருக்கு ஷாக்.. சென்னை, பெங்களூரில் மக்கள் கவலை..!

புதிய வீடு வாங்குவோருக்கு ஷாக்.. சென்னை, பெங்களூரில் மக்கள் கவலை..!

கொரோனா  தொற்றின் ஆரம்ப கட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் மிகவும் முக்கியமான துறை ரியல் எஸ்டேட், கட்டுமான பணிகள் முதல் விற்பனை வரையில் அனைத்தும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனாலேயே மத்திய அரசு ரியல் எஸ்டேட் துறைக்கு அதிகப்படியான சலுகையை அறிவித்தது.

மேலும்  பல மாநிலங்கள் பத்திர பதிவு கட்டணத்தில் அதிகப்படியான சலுகையை அறிவித்தது.  இதோடு ரியல் எஸ்டேட் கட்டுமான திட்டங்களுக்கு அதிகப்படியான கடன் அளிக்கப்பட்ட காரணத்தால் வேலைவாய்ப்பு முதல் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சிப் பாதைக்குச் சென்றது.

ஆனால் இதே வேளையில் புதிய வீடுகளுக்கான டிமாண்ட் மக்கள் மத்தியில் அதிகரித்த காரணத்தால் விலையும் தாறுமாறாக அதிகரித்துள்ளது.

இந்திய ரியல் எஸ்டேட்

பத்திர கட்டணங்கள் பெரிய அளவில் குறைந்த  காரணத்தாலும், மக்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் காரணத்தாலும் புதிய வீடு வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதே வேளையில் சிமென்ட் மற்றும் ஸ்டீல் போன்ற கட்டுமான மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்தியாவின் 8 முக்கியப் பெரு நகரங்களிலும் 2021ஆம் ஆண்டில் புதிய வீடுகளின் விலை 3-7 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.


ப்ராப்டைகர்.காம்

ஆஸ்திரேலியாவின் REA குரூப் கட்டுப்பாட்டில் இந்தியாவில் இயங்கி வரும் ப்ராப்டைகர்.காம் நிறுவனம் வெளியிட்டு உள்ள வருடாந்திர Real Insight Residential 2021 அறிக்கையில், இந்தியாவில் புதிய வீடுகளின் விற்பனை கடந்த வருடம் 1,82,639 ஆக இருந்த நிலையில், 2021ல் 13 சதவீதம் உயர்ந்து 2,05,936 ஆக உயர்ந்துள்ளது.


புதிய வீடுகளின் அறிமுகம்

இதேபோல் புதிய வீடுகளின் அறிமுகம் 2020ல் 1.22 இலட்சமாக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டில் 75 சதவீதம் வரையில் உயர்ந்து 2.14 லட்சமாக உயர்ந்துள்ளது எனப் பார்ப்டைகர் ஆய்வு செய்துள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றுப் பாதிப்பிலிருந்து இந்திய ரியல் எஸ்டேட் துறை முழுமையாக மீண்டு உள்ளது.


அகமதாபாத் To மும்பை

இந்த நிலையில் அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் நகங்களில் புதிய வீடுகளின் விலை 2021 இல் 7 சதவீதம் வரையில் விலை உயர்வுடன் அதிகபட்ச மதிப்பை எதிர்கொண்டு உள்ளது. இதைத் தொடர்ந்து பெங்களூரில் 6 சதவீதமும், புனேவில் 3 சதவீதமும், மும்பையில் 4 சதவீதமும் வீட்டு விலை உயர்ந்துள்ளது.


சென்னை

இறுதியாகச் சென்னை, டெல்லி என்சிஆர் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் வீடுகளின் விலை 5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளன. மேலும் சென்னையில் புதிய வீடுகளின் விற்பனை 25 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.