ரியல் எஸ்டேட் துறை எப்போது கரையேறும்?
ரியல் எஸ்டேட் துறை எப்போது கரையேறும்?
அதிகம் பணம் புழங்கும் துறை என்று பேசப்பட்ட இந்திய ரியல் எஸ்டேட் துறை கடந்த சில ஆண்டுகளாகவே பெருத்த அடி வாங்கி மீளாத் துயரில் சிக்கியுள்ளது. குறிப்பாக, 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு இத்துறையின் வருவாய் குறைந்து நிதி நெருக்கடி அதிகமானது.
பின்னர் 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி, அதைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் சட்டம் கடுமையாக்கப்பட்டது என, ரியல் எஸ்டேட் துறை பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளானது. இதுபோன்ற சூழலில் இந்த ஆண்டில் கொரோனா பாதிப்பால் மேலும் சிக்கல் ஏற்பட்டது. நிதி நெருக்கடி காரணமாக மக்கள் தங்களது ரியல் எஸ்டேட் முதலீடுகளையும், வீடு வாங்கும் எண்ணத்தையும் கைவிட்டனர்.
இந்திய ரியல் எஸ்டேட் துறை கொரோனா பாதிப்பிலிருந்து எப்போது மீளும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், இன்னும் சில மாதங்களில் கொரோனாவுக்கு முன்னர் இருந்த சூழல் திரும்பி விடும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கில் நான்காம் கட்டத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில், அவர்களின் முதலீட்டு வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலானோர் தாங்கள் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். இரண்டாம் அடுக்கு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் வீடு விற்பனை அதிகரிக்கும் என்று கே.பி.எம்.ஜி. ஆய்வில் ரியல் எஸ்டேட் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பணத்தைச் செலவழிக்கலாமா வேண்டாமா என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரண்டாம் அடுக்கு நகரங்களில் 22 சதவீதத்தினரும், மூன்றாம் அடுக்கு நகரங்களில் 30 சதவீதத்தினரும் கொரோனாவுக்கு முன் இருந்த அளவுக்கு அதிகமாகவோ அல்லது அதே அளவிலோ செலவழிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர். ஹவுசிங்.காம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ரியல் எஸ்டேட் துறைதான் முதலீட்டுக்குச் சிறந்த இடம் என்று 35 சதவீதத்தினர் கூறியுள்ளனர். 28 சதவீதத்தினர் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளனர்.
குறைந்த விலை காரணமாக வீடு விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் பண்டிகை சீசனில் இத்துறையில் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக ஹவுசிங்.காம் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மெட்ரோ நகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் மெட்ரோ நகரங்களில் ரியல் எஸ்டேட் துறை இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சில காலம் எடுக்கும் எனவும் இத்துறையினர் கூறியுள்ளனர்.