ரியல் எஸ்டேட் துறையில் நடக்கும் ஊழலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை - நீதிமன்றம்
ரியல் எஸ்டேட் துறையின் அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல் தலை விரித்தாடுவதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை
என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
’திருப்போரூரில் 100 ஏக்கரில் வீடுகள் கட்டி விற்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை’ என, குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தினர், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புகார் அளித்தனர்.
ஆனால், திருப்போரூர் பஞ்சாயத்து செயல் அதிகாரி 2014-ஆம் ஆண்டே பணி முடிப்பு சான்று வழங்கி விட்டதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்று, புகாரை விசாரிக்க, ஆணையம் மறுத்து விட்டது. இதை எதிர்த்து, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், புகாரை 3 மாதங்களில் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, ரியல் எஸ்டேட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரிதார். அப்போது, ரியல் எஸ்டேட் துறையில் அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும், அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முறையாக ஆய்வு செய்யாமல் பணி முடிப்பு சான்றுகள் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தார். குடியிருப்பு உரிமையாளர்களின் புகாரை விசாரித்து 3 மாதங்களில் உத்தரவிட ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.