சென்னைக்கு மிக அருகில்’ - நீரில் மூழ்கிய ரியல் எஸ்டேட் நிலங்கள்
'சென்னைக்கு மிக அருகில்’ என்ற முழக்கத்துடன் விற்பனை செய்யப்பட்ட வீட்டு மனைப்பிரிவு ஒன்று, நீர் தேங்கி ஏரி போல காட்சியளிக்கிறது.
செங்கல்பட்டில் இருந்து பொன்விளைந்த களத்தூர் செல்லும் வழியில் ஒழத்தூர் என்ற ஏரியை ஒட்டிய பகுதி மனைப்பிரிவுகளாக விற்பனைக்கு வந்தன. அந்த இடம் தற்போது குளம் போல காட்சியளிக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் முக்கிய வருவாய் மாவட்டமாக மாறியுள்ளது.
இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விவசாயம் கைவிடப்பட்ட நிலங்கள் வீட்டு மனைகளாக உருமாறி வருவதன் அடையாளமாக இந்த இடம் காட்சியளிக்கிறது. இதுபோன்று நீர்த் தேங்கும் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு மனைப்பிரிவுகளாக மாற்றப்படுவதே மழை வெள்ளகாலத்தில் அதிக பாதிப்புகள் உருவாவதற்கு காரணம் என கூறுகிறார்கள் இப்பகுதி மக்கள்.
சென்னைக்கு அருகில் என்று நம்பி மனை வாங்குவோர், மனையை பார்த்து வாங்க வேண்டும் என்றும், ஏமாறும் நிலைக்குச் செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கிறார்கள் அப்பகுதிவாசிகள். ஏரியை ஒட்டிய வீட்டு மனை குறித்து விளக்கம் கேட்க தொடர்பு கொண்டும், நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலக அதிகாரிகள் முறையான பதில் தரவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.