தமிழகத்தில் குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கு திடீரென அதிகரிக்கும் கிராக்கி.. காரணம் என்ன?

தமிழகத்தில் குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கு திடீரென அதிகரிக்கும் கிராக்கி.. காரணம் என்ன?

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு  பின்னர் மக்கள் மத்தியில் மினிமம் பட்ஜெட் வீடுகள் வாங்க ஆர்வம் அதிகரித்துள்ளது. பலரும் பட்ஜெட் குறைவாக வீடு கட்ட விரும்புவது  ஒருபுறம் என்றால், ஏற்கனவே கடன் வாங்கி வீடு கட்டியவர்கள், கொரோனா ஏற்படுத்திய பாதிப்பால் வீடுகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் அவர்களிடம் முடிந்தவரை அடித்து பேசி குறைந்த விலைக்கு வீடுகளை வாங்குவது அதிகரித்துள்ளது.

இந்தியா  முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் , இந்தியாவின் அனைத்து துறைகளும் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. ஏற்கனவே பொருளாதார மந்த நிலையில் கட்டி முடித்த வீடுகளை விற்க முடியாமல் ப்ரோமோட்டர்கள் அவதிப்பட்ட நிலையில் இந்த கொரோனா முடக்கம் அந்த துறையை முற்றிலும் சீர்குலைத்தது.

இந்தியா  முழுவதுமே கொரோனாவால் கட்டுமான தொழில் ஒட்டுமொத்தமாக முடங்கி கிடந்தது. தமிழகத்தில் பெரும்பாலும் பெரிய அளவிலான மெகா பட்ஜெட் கட்டுமான தொழில்கள், டெண்டர் பணிகள் போன்றவைகளில் வடமாநில தொழிலாளர்கள் செய்து வந்த நிலையில் அவர்கள் எல்லாம் சொந்த ஊருக்கு சென்றதால் முடங்கியது. கிட்டத்தட்ட ஆறு மாத தாமதத்திற்கு பிறகு மீண்டும் மெல்ல மெல்ல ரியல் எஸ்டேட் துறை மீண்டு வருகிறது. 

அடுக்குமாடி வீடு 

பணப்புழக்கம்  குறைந்ததால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்து வருகிறார்கள். இதனால் யாரும் வாங்காமல் காற்று வாங்கிய குறைந்தபட்ச பட்ஜெட் வீடுகளுக்கு திடீரென கிராக்கி அதிகரித்துள்ளது. ரியல் எஸ்டேட் வீழ்ந்து கிடக்கும் தற்போதைய நேரத்தில் முதலீடு செய்வது நல்லது, பின்னாளில் நல்ல முதலீடாக மாறும் என்றும் நம்பும் பணக்காரர்கள் அதில் முதலீடு செய்து வருகிறார்கள்.

வீடு வாங்குவது அதிகரிப்பு 

இதன்படி  நிலம் வாங்குவது, கட்டிய வீடுகளை (ரெடி பில்ட் ஹவுஸ்) வாங்குவது போன்றவைகளில் ஓரளவு வசதியுடையவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இது ஒருபுறம் எனில் இந்த ஆண்டு வீடு கட்டலாம் என்று நினைத்தவர்கள் கூட 6 மாதத்திற்கு பிறகு இப்போதுதான் மொத்தமாக வீடு கட்ட ஆரம்பித்துள்ளனர். திடீரென தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் மக்களிடம் வீடு கட்டும் ஆர்வம் கொரோனா முடக்கத்திற்கு பிறகு அதிகரித்துள்ளது.

எப்படிப்பட்ட வீடுகள்

ரூ.30 லட்சம்  முதல் ரூ.45 லட்சம் பட்ஜெட்டில் ஏற்கனவே கட்டி முடித்த வீடுகளை வாங்குவது அல்லது இந்த பட்ஜெட்டிற்குள் வீடு கட்டுவது அதிகரித்துள்ளது. இது ரியல் எஸ்டேட் தொழில் நடத்துபவர்களுக்கு  இந்த போக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. எனினும் அதே நேரத்தில் ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடிக்கு மேல் கட்டப்பட்ட வீடுகள் அல்லது கட்டப்படும் வீடுகள் தேக்கம் அடைந்துள்ளன. அதிக பட்ஜெட் வீடுகள் மட்டுமின்றி வணிக வளாகம் போன்ற மெகா கட்டிடங்கள் கட்டும் தொழில் தொடர்ந்து முடக்கத்தில் உள்ளது. அதில் முதலீடு செய்தவர்கள் கடந்த 6 மாத ஊரடங்கு முடக்கத்தால் அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளார்கள்.


தங்கம் விலை உயர்வு 

குறைந்த  பட்ஜெட் வீடுகளை வாங்கும் ஆர்வம் திடீரென அதிகரித்து இருப்பது தங்கத்தின் விலை உயர்வு முக்கிய காரணமாக இருக்கலாம். இந்த ஆறு மாதத்தில் தங்கம் விலை கிட்டத்தட்ட 20 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் பலரும் நம்பிக்கையான இடங்கள், குறைந்தபட்ஜெட் வீடுகளில் முதலீடு செய்கிறார்கள். அது மட்டுமின்றி கொரோனா முழு தடைகாலத்தில் பலர் வாடகை வீடுகளில் இருந்ததால் கிடைத்த கசப்பான அனுபவங்களால் எப்படியாவது வங்கி கடன் பெற்றாவது சிறிய வீடு நமக்கென கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறார்கள்.


ரியல் எஸ்டேட் வளர்ச்சி 

இன்னொரு  பக்கம் வங்கிக்கடன் அல்லது வெளியில் கடன் பெற்று வீடு கட்டிய பலர் கொரோனா பாதிப்பால் வருவாய் குறைந்து தொடர்ந்து வீட்டை கட்ட முடியாமலோ அல்லது கட்டிய வீட்டுக்கு கடனை கட்ட முடியாத நிலையிலோ இருக்கிறார்கள். இதுபோன்ற வீடுகளையும் பலர் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. மக்கள் பலர் தங்கத்தில் முதலீடு செய்ய முடியாத காரணத்தால், நிலங்களில் முதலீடு செய்கிறார்கள். எனவே விரைவில் அதன் மதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ரியல் எஸ்டேட் நிபுணர்கள் தெரிவித்தனர்.