சென்னை ரியல் எஸ்டேட்: உங்கள் கனவு வீட்டை வாங்க சிறந்த இடம்

சென்னை ரியல் எஸ்டேட்: உங்கள் கனவு வீட்டை வாங்க சிறந்த இடம்

சென்னை: தமிழகத்தின் தலைநகரமான  சென்னை இந்தியாவின் ஐந்தாவது பெரிய மற்றும் நான்காவது  மக்கள் தொகை அதிகம் கொண்ட பெருநகரமாகும். சென்னை நகரம் கடந்த 15 வருடங்களில் அனைத்துத் துறைகளிலும் இணையற்ற வளர்ச்சி  அடைந்துள்ளது.

இந்த வளர்ச்சிக்கு  ஒரு முக்கியப் பங்கு இங்குள்ள வாகன உற்பத்தி (50% வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இங்கு நிறுவியுள்ளன) தகவல் தொழில் நுட்பம், பெட்ரோகெமிக்கல் மற்றும் நிதிச் சேவைகள் நிறுவனங்களைச் சேரும்.

சென்னை 

இந்தியாவிலேயே  அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் சென்னை 4வது இடத்தில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இங்குள்ள மக்கள் அனைவரின் ஓரே கனவு 'சொந்த வீடு'. 

சென்னையில்  வீடு வாங்க விரும்பி எங்கு வாங்குவது என்ற குழப்பத்தில் இருப்பவரானால், இதொ உங்களுக்காகக் கட்டமைப்பு, சாதகமான உள்ளூர் வசதிகள், வாங்கும் சக்தி மற்றும் மதிப்பு உயர்வு ஆகிய காரணிகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்ட சென்னையின் சில முக்கிய இடங்களைப் பற்றிய விவரங்களைத் தருகிறோம்

ஓ.எம்.ஆர் (ஒல்ட் மகாபலிபுரம் ரோடு அல்லது பழைய மகாபலிபுரம் சாலை) 
ஓஎம்ஆர் (இது ராஜீவ் காந்தி சாலை என்றும் அழைக்கப்படுகிறது) ஒரு ஐம்பது  கிலோமீட்டர் நீளமுள்ள அடையாறு மத்திய கைலாஷ் முதல் காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரம் வரையுள்ள சாலையை ஒட்டியுள்ள பகுதியைக் குறிக்கும். 

தரமணி, பெருங்குடி,  நாவலூர், துரைப்பாக்கம், மத்திய கைலாஷ், சோழிங்கநல்லூர், படூர், கேளம்பாக்கம் மற்றும் தையூர் ஆகியவை இந்தச் சாலையில் உள்ள முக்கியப் பகுதிகள்.

 ஐடி அல்லது  தகவல் தொழில் நுட்பத்துறை தொழில் வளர்ச்சி இந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணியாக விளங்குகிறது.  இங்கு உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான நிறுவனங்கள் நிர்மாணித்துள்ள மிகப்பெரிய குடியிருப்பு வளாகங்களே இதற்கு உதாரணமாக உள்ளன.

ரியல் எஸ்டேட்

ஓஎம்ஆர்  பகுதியில் கட்டிமுடிக்கப் பட்ட வீடுகளை அதிக அளவில் உள்ளதோடு கடந்த 21 மாதங்களில் 6.1 சதவிகித மதிப்பீட்டு உயர்வைப் பதிவு செய்துள்ளது. இங்கு ஒரு வீட்டின் சராசரி மதிப்பு சதுர அடிக்கு 4,315 ரூபாயாக உள்ளது. தற்போதைய அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சியை நோக்கினால் இது முதலீடு செய்பவர்களுக்கும் சரி குடியிருக்க விரும்புவோருக்கும் சரி ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

சிறுசேரி முதல் மகாபலிபுரம் வரையுள்ள சாலையை விரிவுபடுத்தும் பணி உள்ளிட்ட சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் முடிவடைந்துள்ளதால், எதிர்காலங்களில் சொத்து மதிப்பு உயரும் என்பது நிச்சயம்.


ஜிஎஸ்டி ரோடு (கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு) 


ஜிஎஸ்டி சாலையை ஒட்டியுள்ள குடியிருப்புத் திட்டங்கள் அவற்றின் சமூகத் தேவை மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகள் காரணமாகப் பெருமளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இங்குள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதிகள் மற்றும் நல்ல சாலைகள் உள்ளிட்ட சமூக அடிப்படைக் கட்டமைப்புகள் ஒரு விரும்பத்தக்க இடமாக இதனைக் காட்டுகிறது.


ரியல் எஸ்டேட் 


குடியிருப்புக் கட்டமைப்பு இந்தப் பகுதி முழுவதும் நன்கு பராமரிக்கப்படுகின்றது. இது ஒரு போட்டி மிகுந்த சந்தையாக இருப்பதால் முதலீடு செய்ய விரும்புபவர்கள் நிறுவனங்களிடமிருந்து நல்ல சலுகைகளைப் பெற வாய்ப்புண்டு.


 இந்தப் பகுதியில் ஏற்கனவே உள்ள அடிப்படை கட்டமைப்புகளுடன் தற்போது புதிதாக வரவுள்ள திட்டங்களும் இணைந்து இந்தப் பகுதியை ஒரு வெற்றிகரமான சந்தையாக மாற்றியுள்ளது. அடிப்படை விற்பனை விலையில் சராசரி மதிப்பு சதுர அடிக்கு 4293 ரூபாயாக இருப்பதால் இது நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற நடைமுறை சாத்தியமான தேர்வாக ஜிஎஸ்டி சாலை பகுதி உள்ளது.


வேளச்சேரி 


வேளச்சேரி ஒரு நன்கு திட்டமிடப்பட்ட, பெரு நிறுவனங்களால் நிறுவப்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக மையங்கள் நிறைந்த இடம். சுற்றியுள்ள மடிப்பாக்கம், பாலவாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் ஆகிய இடங்களுக்குச் சுலபமாகச் சென்றடையவும் முடியும். 


சிறுசேரி மற்றும் சோழிங்க நல்லூர் போன்ற தொழில் நுட்ப மையங்கள் நிறைந்த ஓஎம்ஆர் முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளிலிருந்து குறுகிய தொலைவில் இருப்பது இந்தச் சந்தையை நன்கு வளர்ச்சியடையச் செய்துள்ளது. இந்தப் பகுதி குடியிருப்போரிடம் இருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


ரியல் எஸ்டேட் 


சந்தை ஆய்வுகளின் கடந்த 21 மாதங்களில் இந்தப் பகுதி மதிப்பு 16.5% சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வேளச்சேரியில் வீட்டின் மதிப்பு சதுர அடிக்கு 9,144 ரூபாயாக இருந்தது.


மறைமலை நகர் 


நடுத்தர வர்க்கத்தின் கைக்கு அடக்கமான வீட்டுவசதி மையமாக்க விளம்பரப்படுத்தப்படும் மறைமலை நகர், சென்னை-திருச்சி ஜி எஸ் டி சாலையில் அமைந்துள்ளது.


 பொதுவாக ஒரு தொழிற்பகுதியாக உள்ள இது, முதலீட்டாளர்களையும் கட்டுமான நிறுவனங்களையும் விலை மலிவான தேர்விற்காக ஈர்க்கிறது.


ரியல் எஸ்டேட் 


குறைந்த பட்ஜெட் வீடுகளுக்காகத் தேடும் மக்களுக்கு 2 முதல் 3 படுக்கையறை கொண்ட வீடுகளை இங்கு 30 லட்சம் ரூபாய்களுக்குள் வாங்கிவிட முடியும்.


 நல்ல சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வசதி, பல நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள இடம் என்பதால் நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்கு மறைமலை நகர் ஒரு நல்ல தேர்வாக உள்ளது. 2015 ஆண்டு முதல் காலாண்டில் இங்குச் சராசரி சொத்து மதிப்பு சதுர அடிக்கு 3,869 ரூபாயாக இருந்தது.

அடையாறு 


சென்னை பெசன்ட் நகர் மற்றும் ஐஐடி ஆகியவற்றிற்கு இடையில் அமைந்துள்ள அடையாறு பகுதி, சென்னையின் மிகப் பிரபலமான குடியிருப்புப் பகுதிகளில் இதுவும் ஒன்று. ஐடி விரைவு சாலை அல்லது ராஜீவ் காந்தி சாலையின் துவக்கப் பகுதியாக இது உள்ளது என்பதோடு டைடல் பார்க்கிற்கு மிக அருகில் உள்ளது (டைடல் பார்க் பல முன்னணி மற்றும் சிறு ஐடி நிறுவனங்களின் அமைவிடம் என்பது குறிப்பிடத்தக்கது).


ரியல் எஸ்டேட் 


கடந்த 21 மாதங்களில் இந்தப் பகுதி 12 சதவிகித மதிப்பு உயர்வை எட்டியுள்ளது. இங்குச் சராசரி சொத்து விலை சதுர அடிக்கு 19,045 ரூபாயாக உள்ளது. ஆடம்பர சந்தை பிரியர்களுக்கு இந்த இடம் மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். 


இது தென்சென்னையிலுள்ள மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது மிக மிக அதிகம். அதிகப் பட்ஜெட் கொண்டவர்களின் தேர்வாக இந்தப் பகுதி உள்ளது. 


என்ன எல்லா விவரங்களையும் படிச்சீங்களா? எப்ப எந்த இடத்துல வீடு வாங்கப் போறீங்க??