காஷ்மீர்ல ஒரு வீட்ட வாங்கிப் போட்ருவோமா..? சதுர அடிக்கு சுமாராக ரூ. 3,000 தானாம்..!
காஷ்மீர்ல ஒரு வீட்ட வாங்கிப் போட்ருவோமா..? சதுர அடிக்கு சுமாராக ரூ. 3,000 தானாம்..!
டெல்லி: சமீபத்தில் தான் இந்திய மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி இருந்த சட்டப் பிரிவு 370 மற்றும் 35A ஆகிய இரண்டையும் ரத்து செய்தது.
அதோடு லடாக் பகுதியை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பிரித்துவிட்டது. அதோடு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டையும் யூனியன் பிரதேசங்களாக மாற்றிவிட்டது.
இந்த நடவடிக்கை சரி, தவறு என ஒரு பக்கம் இன்று வரை விவாதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் பலரும் இனி நாமும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் வீடு வாங்கலாம் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி எளிதில் வீடு வாங்க முடியுமா..?
சட்டப் பிரிவு 35A பல காலங்களாக காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்த சட்டப் பிரிவு 35A-வின் படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்கள், அங்கு நிலம் வாங்க முடியாது என இருந்தது. ஆனால் தற்போது இந்த சட்டப் பிரிவு 35A ரத்து செய்யப்பட்டதால், மற்ற சராசரி இந்திய மாநிலங்களைப் போல யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம், வீடு கட்டலாம் எனச் சொல்கிறது சட்டம்.
ரெரா வேண்டும்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு சட்டப் பிரிவுகளும் ரத்து செய்யப்பட்ட பின், அதுவும் இந்தியாவின் சராசரி யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகி இருக்கிறது. ரியல் எஸ்டேட் தொடர்பான, மத்திய அரசின் அனைத்து விதிமுறைகளும் இனி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களிலும் செல்லுபடியாகும். அதோடு குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு முதலில் ஒரு ரெரா (RERA - Real Estate Regulation & development Act)சட்டம் இயற்றப்பட வேண்டும் என்கிறார் அனராக் சொத்துக்கள் ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் அனுஜ் பூரி.
மலைப் பிரதேசங்கள்
குறிப்பாக ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக், மலைப் பகுதிகள் நிறைந்த யூனியன் பிரதேசங்கள். எனவே இந்த யூனியன் பிரதேசங்களின் ரெரா சட்டங்கள் மற்ற மலை பிரதேச மாநிலங்களின் ரெரா சட்டங்களைப் போல இருக்காது என்கிறார் அனுஜ் பூரி. அதோடு, மத்திய அரசு வீடு வாங்குவது, விற்பது தொடர்பான அனைத்து பரிமாற்றங்களும், ரெரா சட்டத்தின் கீழ் வர வேண்டும் எனச் சொல்லி இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
காத்திருங்கள்
எனவே ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தனியாக ரியல் எஸ்டேட் துறையை நிர்வகிக்கும் அமைப்பு நிறுவப்படும் வரை முதலீட்டாளர்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். அதற்கு முன்பே அங்கு நிலம் வாங்கும் வேலைகளில் ஈடுபடுவதாக இருந்தால் சட்ட நிபுணர்களிடம் கட்டாயம் கலந்து ஆலோசித்து நிலத்தை வாங்குவது நல்லது என எச்சரிக்கிறார் அனராக் நிறுவனத்தின் தலைவர் அனுஜ் பூரி.
காஷ்மீரில் ரியல் எஸ்டேட்
பொதுவாக டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்கள் தான் ரியல் எஸ்டேட் துறைக்கு கவர்ச்சியான இடங்களாக இருக்கின்றன. எனவே ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் ஒரு பெரிய கவர்ச்சிகரமான ரியல் எஸ்டேட் ஹாட் ஸ்பாட்களாக மாற வாய்ப்பு இருப்பதாகவே சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். சரி ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் நிலம் என்ன விலைக்கு கிடைக்கிறது தெரியுமா..?
விலை நிலவரம்
ஸ்ரீநகர் பகுதியில் தோராயமாக ஒரு சதுர அடி நிலம் 2,500 முதல் 3,200 ரூபாய். ஜம்மு பகுதியில் தோராயமாக ஒரு சதுர அடி நிலம் 2,400 முதல் 4,000 ரூபாய் பாரமுலா பகுதியில் தோராயமாக ஒரு சதுர அடி நிலம் 2,500 முதல் 3,200 ரூபாய் ஸ்ரீநகர் பகுதியில் தோராயமாக ஒரு சதுர அடி நிலம் 2,200 முதல் 4,000 ரூபாய்... என விலைப் பட்டியலைப் படித்துக் காட்டுகிறார்கள் அனராக் நிறுவனத்தினர்கள். சரி அப்படியே ரெரா சட்டம் இயற்றிய உடனேயே ஒரு வீட்டை வாங்கிப் போட்டு விட வேண்டியது தானே..!