ஏன் வாடகை ஒப்பந்தம் 11 மாதம் மட்டும் செய்யப்படுகிறது தெரியுமா..?
ஏன் வாடகை ஒப்பந்தம் 11 மாதம் மட்டும் செய்யப்படுகிறது தெரியுமா..?
நீங்கள் எப்போதாவது ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறீர்களா? அப்படியானால், 11 மாத காலத்திற்குக் குத்தகைக்குக் கையெழுத்திடுமாறு உங்கள் வீட்டு உரிமையாளர் உங்களுக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும்.
இந்தியாவில், லீஸ் அல்லது குத்தகை ஒப்பந்தங்கள் வழக்கமாகவே 11 மாதங்களுக்குத் தான் எடுக்கப்படுகிறது. ஓரே வாடகையாளர் ஒப்பந்தம் வீட்டு உரிமையாளரிடம் பலமுறை புதுப்பிக்கப்பட்டாலும் 11 மாதத்திற்குத் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
ஏன் வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதங்களுக்கு மட்டும் செய்யப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
வாடகை ஒப்பந்தம்
வாடகை ஒப்பந்தம் என்பது நில உரிமையாளருக்கும் குத்தகைதாரருக்கும் இடையிலான சட்ட உறவின் எழுத்துப்பூர்வமான ஆவணமாகும். ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இரு தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என்பதால் இத்தகைய ஒப்பந்தம் இரு தரப்புக்கும் சாதகமாக உள்ளது என நம்பப்படுகிறது. ஆனால்..
11 மாத குத்தகை ஒப்பந்தம்
உண்மையில் இத்தகைய 11 மாத குத்தகை ஒப்பந்தம் குத்தகைதாரர்களைக் காட்டிலும் வீட்டின் உரிமையாளர்களுக்கே அதிகளவில் சாதகமாக அமைந்துள்ளது. இதே வேளையில் இந்தியாவில் வாடகைக்கு வீடு அல்லது கடைகள் விடும்போது பல நடைமுறை சிக்கல்கள் உள்ளது.
குத்தகையில் வரும் பிரச்சினை
இந்தியாவில் குத்தகைக்கு விடப்படும் போது ஒருவரின் வீட்டை காலி செய்வது மிகவும் கடினம் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். நடைமுறை தாமதங்கள் காரணமாக நில உரிமையாளர் நீதியைப் பெறும் வரையிலும், வீட்டை முழுமையாகப் பெறவும் சட்ட ரீதியாகச் சென்றால் பல ஆண்டுகள் ஆகும். அதுவரையில் வீடு குத்தகைதாரர்கள் கையில் தான் இருக்கும்.
11 மாத குத்தகை ஒப்பந்தம்
இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே 11 மாத மட்டுமே குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதேவேளையில் இந்த 11 மாத ஒப்பந்தம் எந்த வகையில் எல்லாம் வீட்டின் உரிமையாளர்களுக்குச் சாதகமாக உள்ளது.
பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை
வாடகை அல்லது குத்தகை ஒப்பந்தம் ஒரு வருடத்திற்கும் குறைவாக இருந்தால், ஒப்பந்த பத்திரத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒரு வருடத்திற்கும் குறைவான கால அளவு கொண்ட குத்தகை ஒப்பந்தம் 1908 ஆம் ஆண்டின் பதிவுச் சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. இந்தச் சட்ட விதிகள் 1 வருடத்திற்கும் குறைவான குத்தகை ஒப்பந்தங்களைப் பதிவு செய்யாமல் கையொப்பமிடலாம் என்பதைக் குறிக்கிறது.
முத்திரை கட்டணம் சேமிப்பு
ஒரு வருடத்திற்கும் குறைவாக இருக்கும் குத்தகை பத்திரங்களைப் பதிவு செய்யாமல் இருப்பதால் முத்திரை கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கலாம், இது வீட்டின் உரிமையாளர்களுக்குப் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பதால் தான் 11 மாத குத்தகை ஒப்பந்தம் பரிந்துரைக்கப்படுகிறது.
வாடகை ஒப்பந்தம்
வாடகை ஒப்பந்தத்தைப் பதிவு செய்ய ஒருவர் தேர்வு செய்தால், முத்திரைத் தொகையின் அளவு வாடகை மற்றும் தங்கியிருக்கும் காலம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. நீண்ட குத்தகைக்கு, முத்திரைக் கட்டணம் அதிகமாகும். குறுகிய கால வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டால் குறைவான அளவிலான செலவுகள் மட்டுமே ஆகும் என்றாலும் சில வருடங்களுக்கான ஒப்பந்தம் மட்டுமே என்பதால் இத்தொகையை யார் செலுத்தினாலும் நஷ்டம் தான்.