5 லட்சம் வீடுகள், ரூ.4.48 லட்சம் கோடி.. இந்திய வங்கிகளின் டைம்பாம்..!
5 லட்சம் வீடுகள், ரூ.4.48 லட்சம் கோடி.. இந்திய வங்கிகளின் டைம்பாம்..!
இந்தியாவின் முக்கிய நகரங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான ரியல் எஸ்டேட் திட்டங்கள் முடங்கிக் கிடப்பது கடன் வழங்குபவர்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது.
கொரோனா காலத்தில் இந்தியாவின் வர்த்தகச் சந்தை, வேலைவாய்ப்பு சந்தையை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றிய முக்கியமான துறையாக விளங்கும் ரியல் எஸ்டேட் துறை தற்போது நெருக்கடியில் உள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
இந்திய வங்கிகள் தடைப்பட்ட ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்கள் நீண்ட காலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாராக் கடனாக உருவெடுக்கும் அபாயம் உள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரியல் எஸ்டேட்
இந்தியாவில் ரியல் எஸ்டேட் மீதான கடன் வர்த்தகம் படிப்படியாக அதிகரித்து வருகிறது, ஏனெனில் தொற்றுநோய்க்கு பிந்தைய பொருளாதாரச் சூழ்நிலையில் வணிக மற்றும் குடியிருப்பு தேவை அதிகரித்துள்ளதால் இத்துறையில் நிதி தேவை அதிகமாக உள்ளது.
கடன்கள்
இருப்பினும், இத்துறையில் வங்கிகளுக்கான முக்கியக் கவலை என்னவென்றால், முடங்கிய ரியல் எஸ்டேட் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தக் கடன்கள் மோசமானதாக மாறினால் பணத்தைத் திரும்பப் பெற முடியாத வகையில் வாராக் கடனாக மாறும் என்பது தான்.
500,000 வீடுகள்
ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ANAROCK இன் ஆய்வின்படி, நாட்டின் ஏழு முக்கிய மெட்ரோ நகரங்களின் ரியல் எஸ்டேட் சந்தையில் சுமார் 4.48 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 500,000 வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.
7 நகரங்கள்
என்சிஆர் மற்றும் மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆர்) ஆகிய இரண்டு பகுதிகளில் மட்டும் தேங்கிக் கிடக்கும் இத்தகைய திட்டங்களின் அளவு சுமார் 77 சதவீதமாக உள்ளது. இதேபோல் தாமதமான அல்லது முடங்கிக் கிடக்கும் திட்டங்களில் புனே 9 சதவீதத்தையும், கொல்கத்தா 5 சதவீதத்தையும் கொண்டுள்ளது. பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய தெற்கு பெருநகரங்கள் மீதமுள்ள 9 சதவீத பங்கைக் கொண்டுள்ளன.
ரியல் எஸ்டேட்
பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் பிரிவில் வங்கிகள் தொடர்ந்து கடன் வெளிப்பாட்டை அதிகரித்துள்ளன. உதாரணமாக, CRISIL தரவுகளின்படி, வணிக ரியல் எஸ்டேட் மீதான வங்கிகளின் கடன் வெளிப்பாடு FY22 இல் 2.91 லட்சம் கோடியாக இருந்தது, இது FY19 இல் 2.56 லட்சம் கோடியாகவும், FY17 இல் 2.35 லட்சம் கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.